Last Updated : 01 Feb, 2020 10:42 AM

 

Published : 01 Feb 2020 10:42 AM
Last Updated : 01 Feb 2020 10:42 AM

ஒரு முறை பயன்படுத்தித் தூக்கியெறியும் பிளாஸ்டிக் பேனாக்களைத் தவிருங்கள்: மாணவர்களுக்கு அறிவுரை

புதுச்சேரி

ஒரு முறை உபயோகப்படுத்தி விட்டு தூக்கி எறிந்துவிடக் கூடிய பிளாஸ்டிக் பேனாக்களைத் தவிர்த்து விட்டு அதற்குப் பதிலாக மை ஊற்றி நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தக்கூடிய பேனாக்களை மாணவர்கள் வாங்கிப் பயன்படுத்துவதற்கு முன்வர வேண்டும் என்று வானொலி நிலைய இயக்குனர் தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகமும் இந்திரா நகர் இந்திரா காந்தி அரசு மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்டமும் இணைந்து பள்ளி வளாகத்தில் நடத்திய ''தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தூய்மை இந்தியா'' என்ற இருவார முகாம் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதன் சிறப்புரையில் வானொலி நிலைய இயக்குநர் தட்சிணாமூர்த்தி பேசியதாவது:

''இன்று நம் வாழ்க்கையில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்து விடக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. மாணவர்களும் ஒருமுறை உபயோகப்படுத்தி விட்டு தூக்கி போட்டு விடக்கூடிய பிளாஸ்டிக் பேனாக்களையே பயன்படுத்துகின்றனர். அதற்குப் பதிலாக மை ஊற்றி நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தக் கூடிய பேனாக்களைப் பயன்படுத்த முன்வர வேண்டும். நம்முடைய சமுதாயம் மிகக் குறைந்த பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தும் சமுதாயமாக மாற வேண்டும். கண்மூடித்தனமாக நாம், பிளாஸ்டிக் பொருட்களை அதிக அளவில் பயன்படுத்தக் கூடாது .

புற்றுநோய் அதிகரிக்க புகையிலைப் பழக்கம் முதன்மையான காரணம் என்றால் உணவுப் பொருட்களைப் பிளாஸ்டிக் பாத்திரங்களில் வைத்திருந்து உண்பது என்பது அடுத்த காரணமாக அமைகிறது. எனவே பிளாஸ்டிக் பாத்திரங்கள் மற்றும் பிளாஸ்டிக் பேக்கில் வருகின்ற உணவுப் பொருட்களை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்''.

இவ்வாறு தட்சிணாமூர்த்தி குறிப்பிட்டார்.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் கேசவ் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் ஜி.எழிலரசி மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜாக்குலீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x