Published : 01 Feb 2020 09:35 AM
Last Updated : 01 Feb 2020 09:35 AM

அண்ணா பல்கலை. இணைப்பு அந்தஸ்து: அவகாசம் மீண்டும் நீட்டிப்பு

பொறியியல் கல்லூரிகள் இந்தக் கல்வியாண்டுக்கான இணைப்பு அந்தஸ்தைப் புதுப்பிக்க விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் மீண்டும் நீட்டித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கு முன்பாக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்து இணைப்பு அந்தஸ்தைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அதோடு மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை பல்கலைக்கழகம் மூலமாக, ஏஐசிடிஇயிடம் பெற வேண்டும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை அண்ணா பல்கலைக்கழகம், இந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்த பின்னர், ஏஐசிடிஇக்கு அனுப்பும். ஏஐசிடிஇ அனுமதி அளித்ததும் கல்லூரிகளுக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் இணைப்பு அந்தஸ்து நீட்டித்து வழங்கப்படும். அதன் பிறகே பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நடத்த முடியும்.

அதனடிப்படையில், 2020-21 ஆம் கல்வியாண்டுக்கான இணைப்பு அந்தஸ்து புதுப்பிப்புக்கான விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்டது. இதற்கு ஜனவரி 10 கடைசித் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இணைப்பு அந்தஸ்து புதுப்பிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜனவரி 31 வரை அண்ணா பல்கலைக்கழகம் நீட்டித்தது.

எனினும் இதற்கான வழிகாட்டுதலை ஏஐசிடிஇ இன்னும் வெளியிடாததால், பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை இரண்டாவது முறையாக பிப்ரவரி 10-ம் தேதி வரை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரி கள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் உட்பட 523 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவை அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x