Published : 31 Jan 2020 09:50 AM
Last Updated : 31 Jan 2020 09:50 AM

ஆம்புலன்ஸ் போன்ற அவசரகால வாகனங்களுக்கு உதவும் ஸ்மார்ட் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு: சண்டிகர் பல்கலைக்கழக மாணவர்கள் சாதனை

ஆம்புலன்ஸ் போன்ற அவசரகால வாகனங்களுக்கு உதவும் ‘ஸ்மார்ட் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு’ என்ற நவீனதொழில்நுட்பத்தை சண்டிகர் பல்கலைக்கழகபொறியியல் மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்தியாவில் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளில் 20 சதவீதம் பேர்போக்குவரத்து தாமதங்களாலும், ஆம்புலன்ஸ் விரைவாக செல்ல பிற வாகன ஓட்டிகள் ஒத்துழைக்காததாலும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இறப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் சாலை போக்குவரத்து இடையூறுகளால் தீயணைப்பு வாகனம் போன்ற அவசரகால வாகனங்களும் சரியான நேரத்துக்குபாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லமுடியவில்லை.

இதனை சரிசெய்யும் நோக்கத்தில் சண்டிகர் பல்கலை. பொறியியல் துறையின் 2-ம்ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் படிக்கும் கருவான் என்ற மாணவன் தலைமையில் ஒரு குழு முயற்சி செய்து, ‘ஸ்மார்ட் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு’ என்ற நவீன தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளது.

இதுகுறித்து மாணவர்கள் குழு கூறியதாவது: ஸ்மார்ட் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு (ஸ்மார்ட் ட்ராபிக் சிக்னல்) தனித்துவமான சென்சார் அடிப்படையில் இயங்கும் கருவியாகும். இதனை 4 திசை இருக்கும் சாலையின் நடுவே அமைக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். இப்போது கருவியானது 4 சாலையிலும் நிற்கும் வாகனங்களின் நீளங்களை கணக்கிட்டு வைத்துக் கொள்ளும்.

இப்போது தெற்கு சாலையில் ஒரு ஆம்புலன்ஸ் நோயாளியை அழைத்து வருகிறது என்று வைத்துக் கொள்வோம். ஆம்புலன்ஸுன் ஒலியை ஸ்மார்ட் சிக்னலில் உள்ள ஆர்எப் டிரான்ஸ்மிட்டர் உள்வாங்கி, கன்ட்ரோல் கருவிக்கு அனுப்பும். இப்போது ஆம்புலன்ஸ் நிற்கும் தொலைவுக்கு ஏற்றவாறு, அந்த பக்கம் உள்ள சிக்னலின் மட்டும் பச்சை நிறம் கூடுதல் நேரம் விழும்.

அதேபோல், பிற 3 சாலையில் சிவப்பு நிறம் விழுந்து, வாகனங்களை நிறுத்தி வைக்கும். இதனால், ஆம்புலன்ஸ் விரைவாக செல்ல முடியும். இதுபோன்று அவசரகால சேவைகளுக்கு செல்ல உதவிசெய்து விலைமதிப்பற்ற மனித உயிர்களை காப்பாற்ற முடியும்.

அதேபோல், சாதாரண நேரத்திலும் சாலையில் நிற்கும் வாகனங்களின் அளவை ஸ்மார்ட் ட்ராபிக் சிக்னல் கணக்கிடும். அதிகமான அளவில் வாகனம் நிற்கும் சாலையில் பச்சை நிறம் கூடுதலாக எறியும். இந்த சென்சார் கருவிகள் 100 முதல் 200 மீட்டர் வரை செயல்படும்.

மேலும், அழுத்தத்தை மின்சாரமாக மாற்றும் திறன் கொண்ட பைசோ எலக்ட்ரிக் சென்சார்களை சாலைகளில் அமைப்பதன் மூலம் சாலையில் நிற்கும் வாகனங்களின் அழுத்தத்தினால் ஸ்மார்ட் சிக்னலுக்கு தேவையான மின்சாரம் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்த தொழில்நுட்பத்துக்கு காப்புரிமை பெற இந்தியா காப்புரிமை நிறுவனத்தில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x