Published : 30 Jan 2020 08:45 AM
Last Updated : 30 Jan 2020 08:45 AM

கரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ள ஆபத்தான 30 நாடுகளில் 23-வது இடத்தில் இந்தியா: புதிய ஆய்வில் தகவல்

சீனா முழுவதும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், பொது இடங்களில் மக்கள் ஒன்றாக கூடவேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்காரணமாக, எப்போதும் பரப்பரப்பாக இயங்கும் வூஹான் நகரத்தின் பிரதான சாலை மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

புதுடெல்லி

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் வூஹான் நகரில் கரோனா என்ற ஆபத்தான வைரஸ் 15 நாட்களுக்கு முன்பாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு, சீனாவில் இதுவரை 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில், சீனாவில் இருந்து விமான பயணிகள் வழியாக கரோனா வைரஸ் பல நாடுகளுக்கு பரவி வருகிறது. இந்நிலையில், கரோனா வைரஸால் மோசமான பாதிப்புக்குள்ளான சீன நகரங்களிலிருந்து வரும் விமான பயணிகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு, இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்படி, கரோனா வைரஸ் பாதிப்பால்உலகளவில் மிகவும் ஆபத்தில் உள்ள நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. தாய்லாந்து முதல் இடத்திலும், ஜப்பான் 2-வது இடத்திலும், சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதியான ஹாங்காங் 3-வது இடத்திலும் உள்ளது.

இந்த பட்டியலில் அமெரிக்கா 6-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 10-வதுஇடத்திலும், இங்கிலாந்து 17-வது இடத்திலும், இந்தியா-23 வது இடத்திலும் உள்ளது. மேலும், 20 முக்கிய சர்வதேச நகரங்களில் சிட்னி, நியூயார்க், லண்டன் ஆகியவை உள்ளன.

சீனாவின் முக்கிய நகரமான பெய்ஜிங், குவாங்சோ, ஷாங்காய், சோங்கிங், வூஹான், குவாங்டாங், ஜெஜியாங் உள்ளிட்டவை அதிக ஆபத்து நிறைந்தவையாக உள்ளன.

இதுதொடர்பாக பல்கலை.யின் பேராசிரியர் ஆண்ட்ரூ டாடெம் கூறுகையில், “கரோனா வைரஸ் உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் எவ்வாறுபரவக்கூடும் என்பதை மதிப்பிடுவதற்காக, சீனாவிலும், உலக அளவிலும் மக்கள் இடம் பெயர்வின் வடிவங்களை நாம் புரிந்துகொள்வது மிகஅவசியமாகும். அதனை வரைபடமாக்குவதன் மூலம், மருந்து கண்டுபிடிப்பு போன்ற பொது சுகாதார தலையீடுகளை செய்ய ஆராய்ச்சியாளர்களால் உதவ முடியும்” என்று தெரிவித்தார்.

கரோனா வைரஸ் பாதிப்பு வெளியான பிறகு எடுக்கப்பட்ட தரவுகள் அடிப்படையிலேயே இந்த ஆய்வு முடிவுகள் உள்ளன. ஆனால், சீன புத்தாண்டு கொண்டாடுவதற்காக, வூஹான் நகரத்தில் இருந்து ஏற்கனவே 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேறியிருக்கலாம். இதனால், வரும் காலங்களில் கணக்கில் வராத பல நகரங்களும், நாடுகளும் கரோனா வைரஸால் பாதிக்கப்படலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x