Published : 30 Jan 2020 08:08 AM
Last Updated : 30 Jan 2020 08:08 AM

கரூர் தனியார் பள்ளியில் 4,500 மாணவர்களுக்கு தமிழ் பிராமி எழுத்து பயிற்றுவிப்பு: தமிழ் பிராமியில் எழுதிய திருக்குறள் நூல் விரைவில் வெளியீடு

கரூர் பரணி பார்க் பள்ளியில் திருக்குறளை தமிழ் பிராமியில் எழுதும் பணியில் ஈடுபட்டிருந்த கல்விக்குழும முதன்மை முதல்வர் சொ.ராமசுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள்.

கரூர்

கரூர் தனியார் பள்ளியில் 4,500 மாணவர்களுக்கு தமிழ் பிராமி எழுத்து பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உதவியுடன் முதன்மை முதல்வர் சொ.ராமசுப்ரமணியன் திருக்குறளை தமிழ் பிராமியில் எழுதியுள்ளார்.

கரூர் வெண்ணெய்மலையில் பரணி பார்க் கல்விக்குழும பள்ளிகள் உள்ளன. இங்கு மெட்ரிக், சிபிஎஸ்இ, பி.எட் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு 300 ஆசிரியர்கள், 5,500-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். இப்பள்ளி முதன்மை முதல்வராக சொ.ராமசுப்பிரமணியன் உள்ளார்.

பரணி பார்க் பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீழடி அகழாய்வு தொடர்பான கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சிக்காக தமிழ் பிராமி எழுத்து அறிந்த ஆசிரியை புவனேஸ்வரி மூலம் 100 மாணவ, மாணவிகளுக்கு பிராமி எழுத்து கற்றுக்கொடுக்கப்பட்டது. அவர்கள் கண்காட்சியில் பங்கேற்ற பார்வையாளர்களின் பெயரை பிராமியில் எழுதிக் கொடுத்தனர்.

இதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால், முதன்மை முதல்வர் சொ.ராமசுப்ரமணியன், சொந்த முயற்சியால் இணையதளம், புத்தகங்கள் உதவியுடன் தமிழ் பிராமி எழுத்துகளை கற்றுக்கொண்டார்.

பின்னர், அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரு வாரத்தில் தமிழ் பிராமி எனப்படும் ‘தமிழி' கற்றுத் தர ஏற்பாடு செய்தார். இதைத்தொடர்ந்து, பள்ளியில் உள்ள 3-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் 4,500 மாணவ, மாணவிகளுக்கும் நாள்தோறும் தமிழ் பிராமி கற்றுக்கொடுத்து வந்தனர். இந்த பணி நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

இதுகுறித்து முதன்மை முதல்வர் சொ.ராமசுப்ரமணியன் கூறியது: இங்குள்ள புகழிமலைக்கு சமணர் படுக்கையை காண சென்றபோது, அங்குள்ள எழுத்துகளை வாசிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருந்தினேன். பின்னர், பள்ளியில் நடைபெற்ற கீழடி அகழ்வாய்வு தொடர்பான கண்காட்சியில் மாணவர்களின் பெற்றோர் எழுப்பிய கேள்வியால், உலகின் முதல் மொழியின் முதல் எழுத்து வடிவமான தமிழ் பிராமியை அறிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டு, பயின்றேன்.

மேலும், தமிழ் பிராமியை அனைவருக்கும் கற்றுத் தர வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. எனவே, பரணி பார்க் கல்விக்குழும மாணவ, மாணவிகளிடம் இதை கொண்டு சேர்க்க திட்டமிட்டேன். அதனால், முதலில் பள்ளி ஆசிரியர்களுக்கும் அதைத்தொடர்ந்து, மாணவ, மாணவிகளுக்கும் தமிழ் பிராமியை கற்றுக்கொடுத்தேன்.இதையறிந்து பள்ளி முன்னாள் மாணவ, மாணவிகள் பலர் ஆர்வமாக கேட்டதால், ஒரு பயிற்சி முகாம் நடத்தி அதில் முன்னாள் மாணவ, மாணவிகள் 75 பேருக்கும் தமிழ் பிராமியை பயிற்றுவித்தோம்.

அப்போது, இதை 1 லட்சம் பேருக்குபயிற்றுவிக்க வேண்டும் என திட்டமிட்டோம். அதன் அடிப்படையில் சிபிஎஸ்இ பள்ளிதமிழ் ஆசிரியர்களுக்கு கடந்த வாரம்நடந்த பயிற்சி முகாமில் தமிழ் பிராமி பயிற்றுவிக்கப்பட்டது. இதுவரை 10,000 பேருக்கு தமிழ் பிராமி பயிற்றுவிக்கப்பட்டுள்ளது.

திருக்குறளை தமிழ் பிராமியில் எழுத திட்டமிட்டு 10 ஆசிரியர்கள், 28 மாணவ, மாணவிகள் உதவியுடன் கடந்த அக்டோபர் மாதம் இதற்கான பணியை தொடங்கி, டிசம்பரில் ‘தமிழி' திருக்குறள் நூலை நிறைவு செய்தோம். தமிழ் பிராமி திருக்குறள் நூலில் ‘தமிழ் பிராமி எழுத்திலும் அதன் கீழ் தற்கால தமிழிலும் திருக்குறள் அச்சிடப்பட்டுள்ளது.

இந்த நூலை இந்திய தொல்பொருள் நினைவுச் சின்னங்கள் தலைவராக உள்ள தருண்விஜயிடம் கடந்த மாதம் வழங்கினோம். அவர், டெல்லி மற்றும் சென்னையில் விழா நடத்தி, தமிழ் பிராமி திருக்குறள் நூலை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். விரைவில், தமிழ் பிராமி திருக்குறள் நூல் வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x