Published : 30 Jan 2020 07:51 AM
Last Updated : 30 Jan 2020 07:51 AM

தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை; நலநிதி சட்டத்தின் கீழ் ஒப்பந்த தொழிலாளர்கள்- தமிழக நலவாரியம் கூட்டத்தில் முடிவு

சென்னை

ஒப்பந்தத் தொழிலாளர்களை தமிழக தொழிலாளர் நலநிதிச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவது என தமிழக நலவாரிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தமிழக தொழிலாளர் நலவாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக தொழிலாளர் நலநிதியை இணையதளத்தின் மூலம்செலுத்துவதற்கு வசதியாக தமிழகதொழிலாளர் நல வாரியத்துக்கென தனி இணையதளத்தை (http://wb.tn.gov.in) தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபீல்நேற்று தொடங்கி வைத்தார். சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள ஜீவா இல்லம், இணைப்புக் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு, தொழிற்சங்க மகளிர் தங்குவதற்காக மேம்படுத்தப்பட்டுள்ளது. அக்கட்டிடத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

ப்ரீகேஜி முதல் உதவி தொகை

பின்னர் நலவாரியத்தின் 78-வது கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. பள்ளிகளில் பயிலும் தொழிலாளர்களின் குழந்தைகள் பயன்பெறும் வகையில் கல்வி உதவித்தொகை ப்ரீகேஜி முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,000-மும் , 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.2 ஆயிரமும், 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கலாம். மாவட்ட அளவிலான உள்விளையாட்டு, வெளி விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள தகுதிபெறும் தொழிலாளர் பிள்ளைகளுக்கு முறையே 6 முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.3 ஆயிரம், 9 முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.5 ஆயிரம் விளையாட்டு உதவித் தொகை வழங்கப்படும்.

மேலும் இப்போட்டிகளில் மாநில அளவில் முதலாவது தகுதிபெறும் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் 2-வது தகுதிபெறுவோருக்கு ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும்.

இதுதவிர மாதிரி வினாத்தாள் மற்றும் பயிற்சிக் கையேடு இலவசமாக வழங்குதல், உயர் கல்விக்கான நுழைவுத்தேர்வு எழுதும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பயிற்சி உதவித்தொகை வழங்குவது என்றும், ஒப்பந்தத் தொழிலாளர்களை தமிழக தொழிலாளர் நலநிதிச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளர் முகமது நசிமுத்தின், தொழிலாளர் ஆணையர் இரா.நந்தகோபால், எம்எல்ஏ வி.பி.பி.பரமசிவம், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் கா.மனோகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x