Published : 29 Jan 2020 05:42 PM
Last Updated : 29 Jan 2020 05:42 PM

12-வது பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி: சென்னையில் பிப்.1-ம் தேதி தொடக்கம்

மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் நேரு யுவகேந்திரா சங்கதன் சார்பில் 12-வது பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி சென்னையில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி தொடங்குகிறது.

இத்தகவலை நேரு யுவகேந்திரா சங்கதன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில இயக்குனர் எம்.என்.நடராஜ் தெரிவித்துள்ளார். இந்தப் பரிமாற்ற நிகழ்ச்சி குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி பிப்ரவரி 1-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இந்தப் பரிமாற்ற நிகழ்ச்சியில் சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து, 15 முதல் 29 வயது வரையுள்ள 200 பழங்குடி இளைஞர்கள் பங்கு பெற உள்ளனர். இதில் 58 பெண்களும் அடங்குவர். இதன் தொடக்க விழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்க உள்ளார்.

அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பழங்குடி இளைஞர்கள் சென்னையில் உள்ள முக்கியத் தலங்களைச் சுற்றிப் பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விஷக்கடியிலிருந்து தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது, அப்படிப் பாதிக்கப்பட்டால் அவர்களுக்குத் தேவையான முதலுதவியை எவ்வாறு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் அந்த இளைஞர்களுக்கு வழங்கப்பட உள்ளன. இந்த 7 நாட்களிலும் தமிழகத்தின் கலாச்சாரங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை சத்தீஸ்கர் பழங்குடி இளைஞர்கள் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பழங்குடி மக்கள் பல்வேறு மொழி, கலாச்சார வாழ்க்கை முறை போன்றவற்றில் பின்தங்கியிருப்பதால் நாட்டின் அன்றாட நிகழ்வுகளை அறிய முடியாமலும் மற்ற மக்களுடன் நேரடித் தொடர்பு இல்லாமலும் வாழ்ந்து வருகின்றனர். அத்தகைய சூழலில் படிக்காத, பள்ளிக் கல்வியைத் தொடர முடியாத, வேலையில்லாத இளைஞர்கள் மற்ற மக்களோடு வாழவும், அவர்களிடம் உள்ள பழக்க வழக்கங்களின் குறைகளைக் களையவும் இத்தகைய பரிமாற்ற முகாம் மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக 27 நாடுகளுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

நாட்டில் உள்ள 31 மாநிலங்களிலிருந்து குறிப்பாக பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத பாதிப்பு அதிகம் உள்ள ஜம்மு, காஷ்மீர், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து ஏராளமான இளைஞர்கள் இத்தகைய முகாம்களில் பங்கேற்க வழிவகை செய்யப்படுகிறது''.

இவ்வாறு நடராஜ் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x