Published : 29 Jan 2020 12:54 PM
Last Updated : 29 Jan 2020 12:54 PM

8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையில் சிறப்பு வகுப்பு?- தொடக்கக் கல்வி இயக்குநரகம் விளக்கம்

8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு தொடக்கக் கல்வி இயக்குநரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறையில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாயத் தேர்ச்சி செய்வதால் கல்வித் தரம் பாதிக்கப்படுவதாகவும், புதிய சட்டத் திருத்தப்படி 5, 8-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வும், அதில் தோல்வியடையும் மாணவர்களுக்கு 2 மாதங்களில் உடனடித் தேர்வும் நடத்த வேண்டும் என்றும் இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கு பல மாநிலங்கள் ஆதரவு தெரிவித்து சட்டத்தை நடைமுறைப்படுத்தின. தமிழக பள்ளிக் கல்வித்துறையும், மத்திய அரசின் ஆணைப்படி, 2019-2020 -ம் கல்வி ஆண்டு முதல் (நடப்பு ஆண்டு) 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்தது.

அப்படி 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தினால் பள்ளிகளில் இடைநிற்றல் அதிகமாகும், கிராமங்களில் ஏழை மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிடுவார்கள் என்று ஆசிரியர்களும், கல்வியாளர்களும் எச்சரித்தனர். எனினும் அரசு, தேர்வு நடக்கும் என்றும் முதல் மூன்று ஆண்டுகளுக்கு யாரும் ஃபெயில் ஆக்கப்பட மாட்டார்கள் எனவும் உறுதிப்படுத்தியது.

இதற்கிடையே 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை வேளைகளில் 1 மணிநேரம் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் என்று ஈரோடு மாவட்டக் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியதாக செய்திகள் வெளியாகின. இது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையில் சிறப்பு வகுப்பு நடத்தப்படாது என்று தொடக்கக் கல்வி இயக்குநரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x