Published : 29 Jan 2020 10:02 AM
Last Updated : 29 Jan 2020 10:02 AM

ஆசிரியருக்கு அன்புடன்!-13: கரும்பலகைக் காடு பூத்துக் குலுங்குவது எப்போது?

ரெ.சிவா

பள்ளி நுழைவுவாயிலுக்கு முன்பாக வளரிளம் பருவச் சிறுவர்கள் விளையாடிக்கொண்டும் ஆடிப்பாடிக்கொண்டும் சிகரெட் புகைத்துக்கொண்டும் சாலையில் செல்லும் பெண்களைக் கேலி செய்துகொண்டும் இருக்கிறார்கள். இவற்றை எல்லாம் பார்த்தபடியே ஒருவர் பள்ளிக்குள் நுழைகிறார்.

ரிச்சர்ட் டாடியேர் என்ற அவர் ஆங்கில ஆசிரியர் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு வந்திருக்கிறார். அவருக்கு அந்தப் பள்ளியில் வேலை கிடைக்கிறது. மெதுவாக முதல்வரிடம், “மாணவர்களிடம் ஒழுக்கம் சார்ந்த பிரச்சினைகள் இருக்கிறதே!” என்று சொல்கிறார். நான் முதல்வராக இருக்கும் வரை அப்படி எதுவுமே இங்கு கிடையாது என்று முதல்வர் அழுத்தமாகக் கூறுகிறார்.

ஆசிரியர் அறையில் மூத்த ஆசிரியர் ஒருவர் ரிச்சர்டிடம், “இது பள்ளிக்கூடம் அல்ல. நிரம்பி வழியும் குப்பைத் தொட்டி. ஊரில் இருக்கும் குப்பைகளை எல்லாம் இங்கு கொட்டி வைத்திருக்கிறார்கள். நம்மை மாதிரி படித்தவர்களை ஆசிரியர் என்று அந்தக் குப்பைத் தொட்டி மீது உட்கார வைக்கிறார்கள்” என்கிறார்.

மாணவர்களால் தாக்கப்படும் ஆசிரியர்

ரிச்சர்ட், வகுப்பறைக்குள் ஆர்வத்துடன் நுழைந்து தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். கரும்பலகையில் தன்னுடைய பெயரை எழுதி முடிப்பதற்குள் ஒரு கிரிக்கெட் பந்து கரும்பலகை மீது வேகமாக வந்து விழுகிறது. அவர் பெயர் எழுதிய இடம் பெயர்ந்து கீழே விழுகிறது.

பள்ளி முடிந்து திரும்பும் போது ஆசிரியைஒருவரின் ஒற்றை செருப்பு பள்ளி நூலகத்தின் வெளியே கிடைக்கிறது. மூடியிருக்கும் நூலகத்தின் உள்ளே இருந்து சத்தம் வர கதவை உடைத்துக் கொண்டு உள்ளே செல்கிறார். ஒரு மாணவன் ஆசிரியையை பலவந்தப்படுத்திக் கொண்டிருக்கிறான். ரிச்சர்ட் அவனை கடுமையாக தாக்குகிறார். தப்பிக்க முயற்சித்தவன் அவரால் பிடிபடுகிறான். சிறையில் அடைக்கப்படுகிறான்.

மறுநாள் பள்ளி முடிந்தபின் ரிச்சர்ட் சக ஆசிரியருடன் பேசிக்கொண்டே குறுகலான ஒரு சந்தின் வழியே பேருந்து நிறுத்தம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார். சில மாணவர்கள் சேர்ந்து இருவரையும் கடுமையாக தாக்குகிறார்கள். காவலர்கள் வருவதை அறிந்த மாணவர்கள் ஓடி விடுகிறார்கள். முகத்தில் பெரிய வெட்டுக்காயத்துடன் ரிச்சர்ட் வீட்டுக்கு வருகிறார். அவரது மனைவி இனிமேல் பள்ளிக்குச் செல்ல வேண்டாம் என்று கதறி அழுகிறார்.

எதற்காக ஆசிரியரானாய்?

சில நாட்கள் மருத்துவ விடுப்பு முடிந்து பள்ளி செல்வதற்கு முன்னால் தன்னுடைய பேராசிரியரை ரிச்சர்ட் சந்திக்கிறார். இத்தகைய மோசமான சூழ்நிலையில் கையறு நிலையில் தான் இருப்பதாகச் சொல்லி அவரது பள்ளியில் வேலை கேட்கிறார்.

“உன் நண்பர்கள் பல்வேறு வேலைகளில் இருக்கும் போது நீ எதற்காக ஆசிரியர் பயிற்சி எடுத்துக் கொண்டாய்?” என்று பேராசிரியர் கேட்கிறார். “என்னுடைய நண்பர்கள் அவரவரின் ஆசை, தனித்திறனுக்கு ஏற்ப படிப்பைத் தேர்ந்தெடுத்தார்கள். நான் குழந்தைகளின் சிந்தனையை உருவாக்குவதே என்னுடைய படைப்பாற்றல் என்று நம்பினேன். ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தேன்” என்கிறார் ரிச்சர்ட்.

“சரி! நீ விரும்பினால் இங்கு வேலை தருகிறேன். இங்கு யாராலும் வேலை பார்க்கமுடியும். உனது பள்ளி போன்ற சவாலான இடத்தில் நீதானே வேலை பார்க்கவேண்டும்!” என்று பேராசிரியர் சொல்கிறார். தன்னுடைய கன்னத்தில் மாணவர்கள் தாக்கியதால் ஏற்பட்ட தழும்பை தடவிக்கொண்டே, “சார், நீங்க சொல்றதுதான் சரி. இன்னொரு தழும்பைச் சந்திக்க நான் என்னுடைய காட்டுக்கே செல்கிறேன்” என்கிறார் ரிச்சர்ட்.

பூக்கத் தொடங்கும் காடு

மீண்டும் பள்ளிக்கு ரிச்சர்ட் திரும்புகிறார். சில மாணவர்களின் தனித்திறமையை கவனித்து பாராட்டத் தொடங்குகிறார். திரைப்படம் காட்டும் கருவியை கொண்டு வந்துஒரு சிறுகதையை வகுப்பறையில் திரையிடுகிறார். கருத்துக்களை பேசி ஒலிப்பதிவு செய்தல், படங்களை பார்த்துக் கலந்துரையாடுவது என்று வகுப்பறை புதிய வடிவம் கொள்கிறது.

தேர்வில் பார்த்து எழுதும் ஒரு மாணவனை ரிச்சர்ட் கண்டிக்கிறார். கோபம் கொண்டஅவன் கத்தியோடு பாய்கிறான். அவனிடமிருந்து கத்தியைப் பறிக்கும் முயற்சியில் ரிச்சர்ட் கையில் காயம் பட்டு ரத்தம் கொட்டுகிறது. அவனுக்கு துணையாக ஒரு மாணவன் மட்டுமே இருக்க மற்றவர்கள் ஆசிரியரைக் காப்பாற்ற முயல்கிறார்கள். பள்ளி முடிந்து செல்லும் டாடியேரிடம் ஒரு மாணவன், “நாளை நிறைய கலந்துரையாடலாம் சார்!” என்று முகம் மலரச் சொல்லுகிறான். ரிச்சர்டின்கரும்பலகை காடு பூக்கத் தொடங்குகிறது.

இன்றைய வகுப்பறைகள் சந்திக்க தொடங்கி இருக்கும் வன்முறைகளை மேலை நாடுகளில் 55 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்திருக்கிறார்கள். வளரிளம் பருவத்தில் நிலைதடுமாறும் மாணவர்களைப் பண்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆசிரியர்கள் யோசிக்க வேண்டும்.

படத்தின் பெயர் : Blackboard Jungle
ஆண்டு :1955
மொழி : ஆங்கிலம்

கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர், எழுத்தாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x