Published : 29 Jan 2020 08:20 AM
Last Updated : 29 Jan 2020 08:20 AM

தேர்வுக்குத் தயாரா? - பொருள் உணர்ந்து படித்தால் பொருளியலில் வெல்லலாம்!

தொகுப்பு: எஸ்.எஸ்.லெனின்

பிளஸ் 2 பொருளியல்

பொருளியல் பாடத்தை பொறுத்தவரை நடைமுறை பயன்பாடுகளை பாடக்கருத்துக்களுடன் ஒப்பிட்டு படிப்பது, அன்றாட வாழ்க்கைக்கு உதவிகரமாக அமையும். மேலும், பொருளியல் பாடப் பகுதியில் கூடுதல் விளக்கம் பெறவும் மதிப்பெண் உயர்வுக்கும் வழி செய்யும்.

வினாத்தாள் அமைப்பு

90 மதிப்பெண்களுக்கான பிளஸ் 2 பொருளியல் வினாத்தாள் 4 பகுதியாக உள்ளது. ஒருமதிப்பெண் பகுதி 20 மதிப்பெண்களுடன் அமைந்துள்ளது. 2 மற்றும் 3 மதிப்பெண் வினாக்கள் தலா 10-லிருந்து 7 வினாக்களாக கேட்கப்படுகின்றன. அவற்றில் தலா ஒன்று கட்டாய வினாவாகும். ’அல்லது’ வகையிலான 5 மதிப்பெண் பகுதி 7 வினாக்களுடன் அமைந்துள்ளது.

உள் வினா – உயர் சிந்தனை வினா

வினாத்தாளில் இடம்பெறும் வினாக்களில் 20 சதவீதம் வரை உள்ளிருந்து மற்றும் உயர் சிந்தனைக்கான வினாக்கள் இடம்பெறலாம். அதிக மதிப்பெண்களை இலக்காகக் கொண்ட மாணவர்கள் இப்பகுதியில் மதிப்பெண் இழக்கவும் காரணமாகிறது. ஒரு மதிப்பெண் பகுதிக்கான வினாக்கள் பாடநூலில் மொத்தம் 240 உள்ளன.

அவற்றிலிருந்தே தேர்வுக்கான 20 ஒருமதிப்பெண் வினாக்களில், 16 முதல் 18 வரை கேட்கப்பட வாய்ப்புள்ளது. இதர வினாக்களுக்கு பாடங்களின் உள்ளிருந்தே தயாராக வேண்டும். தலைப்புகள் வாரியாக ஒரு மதிப்பெண்ணுக்கு வாய்ப்புள்ள வினாக்களை தொகுத்துப் படித்தால்முழு மதிப்பெண் உறுதியாகும்.

இதே போன்று 2 மற்றும் 3 மதிப்பெண் வினாக்களிலும், பாடங்களின் பின்னுள்ள வினாக்களில்இருந்தே பெருமளவு இடம்பெறும். உயர் சிந்தனைவினாக்களை புரிதலின் அடிப்படையில் அடையாளம் கண்டுபடிக்க வேண்டும். மேலும் பாடங்களின் பின்னுள்ள வினாக்களின் வாயிலாகவே புதிய வினாக்களையும் உருவாக்கிப் பழகுவது உள்ளிருந்து கேட்கப்படும் ஒருசில வினாக்களுக்கும் பதிலளிக்க உதவும்.

தேர்ச்சி நிச்சம்

ஒரு மதிப்பெண் பகுதிக்கான பாடங்களின் பின்னுள்ள வினாக்களைப் படித்தாலே சுமார் 15 மதிப்பெண்களைப் பெற்றுவிடலாம். ஏதேனும் 9 பாடங்களை குறிவைத்துப் படித்தால், 2 மற்றும் 3 மதிப்பெண் பகுதிகளில் தலா 6 வினாக்கள் வரை பதிலளித்து விடலாம். இதே போன்று, 2,4,6,8,10,11 ஆகிய பாடங்களின் பின்னுள்ள 23 ஐந்து மதிப்பெண் வினாக்களை படித்தாலே, அப்பகுதியின் 6 வினாக்களுக்கு பதிலளிக்க இயலும். இந்த வகையில் தேர்ச்சிக்கு அப்பாலும்,அதிகபட்சமாக 50 முதல் 60 வரை மதிப்பெண்களைப் பெற்றுவிடலாம்.

அதிக மதிப்பெண்களுக்கு

தலைப்பு, துணைத்தலைப்பு, சூத்திரங்கள்,அட்டவணை, வரைபடம் ஆகியவற்றை எழுதுவதுடன் அவற்றுக்கான விளக்கங்களையும் எழுதிப் பழகுவது முழு மதிப்பெண்ணுக்கு உதவும்.வினாக்களை ஓரிரு முறைகள் முழுமையாக வாசித்து பொருளுணர்ந்த பின்னரே விடையளிப்பது அவசியம். இதன் மூலம் வினாவுக்கு உரிய விடையை செறிவாக எழுதலாம். அதோடு, குழப்பமின்றியும் விடைகளை எழுத முடியும். ‘காரணம், வகைகள், பயன்கள், எல்லைகள், சார்ந்த மற்றும் சாராத’ என்பதான வினாக்கள் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் அவற்றை கவனமாக எதிர்கொள்ள வேண்டும்.

5 மதிப்பெண் பகுதியில் ’விதிகள், பணிகள், காரணங்கள், விளைவுகள்’ ஆகியவை சார்ந்த வினாக்கள் கேட்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அதிக துணை தலைப்புகள் மற்றும் விளக்கங்கள்கொண்ட வினாக்கள் நேரத்தை விரயமாக்கும் என்பதால் அவற்றை சாய்ஸில் விடுவது நல்லது.

கட்டாய வினாக்களில் கவனம்

உள்ளிருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு அடுத்தபடியாக கட்டாய வினாக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. பாடங்களை புரிந்துகொள்வது, நடைமுறை பயன்பாடுகளுடன் பாடக்கருத்துக்களை ஒப்பிட்டு சிந்திப்பது, அவை தொடர்பானசெய்திகள், கட்டுரைகளை தொடர்ச்சியாக வாசிப்பது போன்றவை கட்டாய வினாக்களுக்கு எளிதாக பதிலளிக்க உதவும். இந்த வகையில் ’ஜிஎஸ்டி, நிதி ஆயோக், பண மதிப்பிழப்பு, மற்றும் புள்ளியியல்’ சார்ந்த வினாக்களுக்கு தனித்துவத்துடன் விடையளிப்பது சாத்தியமாகும்.

திருப்புதலில் கவனம்

ஒரு மதிப்பெண் வினாக்களை முதலில் பாடவாரியாக படித்து எழுதிப் பார்க்க வேண்டும். பின்னர் அலகுகள் அடிப்படையில் தேர்வெழுதி பார்ப்பதுடன் நிறைவாக, மாதிரி வினாத்தாள்களின் உதவியுடன் மொத்தமாக தொகுத்தும் எழுதிப் பார்க்கலாம். 2,3 மற்றும் 5 மதிப்பெண் வினாக்களுக்கு படிக்கையில், ’எடுகோள்கள், அட்டவணைகள், வரைபடம், விளக்கப்படம்’ ஆகியவற்றை எழுதிப் பார்த்து திருப்புதல் செய்ய வேண்டும்.

மெல்லக் கற்கும் மாணவர்கள் பாடத் தேர்ச்சியை உறுதிசெய்யும் வகையில், ஏற்கனவே படித்ததை மட்டுமே திருப்புதல் செய்ய வேண்டும். தேர்ச்சி உறுதியானதும் கூடுதலாக படிக்கத் தொடங்கலாம். துணைத்தலைப்புகள் மற்றும் விடைக் குறிப்புகள் வாயிலாக திருப்புதலை விரைவாக மேற்கொள்ளலாம். மேலும்இந்த விடைக்குறிப்புகளே முழு மதிப்பெண்ணுக்கு காரணமாகும் என்பதால், அவற்றை மறக்காதிருக்கவும் இந்த வகை திருப்புதல் உதவும்.

தேர்வறை கவனக் குறிப்புகள்

இயன்றவகையில் வினாத்தாளின் வினா வரிசையை மாற்றாமல் விடையளிப்பது நல்லது. குறைந்தது வினா பகுதிகளை ஒன்றுக்கொன்று மாற்றாமல் எழுதலாம். ஒரு மதிப்பெண் பகுதியில் விடையுடன் உரிய ’ஆப்ஷன்’ எடுத்து எழுதுவதுடன், 5 மதிப்பெண் பகுதியிலும் ‘அல்லது’ வினாவுக்கான ’அ, ஆ’ ஆகியவற்றை சரியாக எடுத்து எழுதுவதும் முக்கியம்.

முக்கிய வார்த்தைகள் மற்றும் சூத்திரங்களுக்கு அடிக்கோடிட்டு தனித்து காட்டலாம். அட்டவணையின் தலைப்புகள், வரைபடங்களின் X, Y அச்சுக்கான விளக்கங்கள் ஆகியவற்றையும் சரியாக குறிக்க வேண்டும். புள்ளியியல் ரீதியிலான வினாக்களுக்கு விடையளிக்கையில், நேரிடையாக விடைகளை எழுதாது அதற்கான வழிமுறைகளுடன் எழுதினால் மட்டுமே முழு மதிப்பெண் பெற முடியும்.

நேர மேலாண்மை

ஒரு மதிப்பெண் பகுதிக்கு 20, 2 மதிப்பெண்களுக்கு 25, 3 மதிப்பெண்களுக்கு 45, 5 மதிப்பெண்களுக்கு 75 என நிமிடங்களை அதிகபட்சமாக பிரித்து ஒதுக்கினால், குறைந்தது 15 நிமிடம் விடைத்தாள் சரிபார்த்தலுக்கு கிடைக்கும்.

- பாடக் குறிப்புகள் வழங்கியவர்:
ஆர்.ரமேஷ்,
முதுகலை ஆசிரியர் (பொருளியல்),
காந்தி மேல்நிலைப் பள்ளி,
திருச்சிற்றம்பலம்,
விழுப்புரம் மாவட்டம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x