Last Updated : 28 Jan, 2020 06:37 PM

 

Published : 28 Jan 2020 06:37 PM
Last Updated : 28 Jan 2020 06:37 PM

புதுச்சேரி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவிகள் சேர்க்கை சரிவு: 4 படிப்புகளில் மாணவிகளே சேராத சூழல் 

புதுச்சேரி அரசு தொழிற்பயிற்சியில் மாணவிகளின் சேர்க்கை சரிந்துள்ளது. 7 பிரிவுகளில் உள்ள 4 படிப்புகளில் மாணவிகளே சேராத சூழல் நிலவுகிறது.

புதுச்சேரியில் கடந்த 1978-ம் ஆண்டு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையமும், 1985-ல் பெண்கள் தொழிற்பயிற்சி நிலையமும் தொடங்கப்பட்டு தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் பெண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவிகள் எண்ணிக்கை குறைந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்புத் தலைவர் ரகுபதி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் பெற்றார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

''பெண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் ப்ரோகிராம் உதவியாளர், டெஸ்க்டாப் பப்ளிஷிங் ஆப்ரேட்டர், பேஸிக் காஸ்மெட்டாலஜி, டிராப்ட்ஸ்மேன் (சிவில்), எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், இன்ஃபர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் டெக்னாலஜி சிஸ்டம்ஸ் மெயின்டனன்ஸ், சீவிங் டெக்னாலஜி ஆகிய 7 படிப்புகள் உள்ளன. இதில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் படிப்பில் மட்டுமே அதிகபட்சமாக 25 பேர் படிக்கின்றனர்.

டிராப்ட்ஸ்மேன் சிவில் இரு பிரிவுகள்- எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்ஸ், இன்பர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன்ஸ், டிரஸ் மேக்கிங் ஆகிய நான்கு படிப்புகளில் ஒரு மாணவி கூட சேரவில்லை. இங்கு ஆசிரியர் மற்றும் நிர்வாகப் பிரிவு ஊழியர்கள் என 26 பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 2.55 கோடி ஊதியமாகச் செலவிடப்படுகிறது.

அதே நேரத்தில் ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் அனைத்துத் தொழிற்பயிற்சிப் பிரிவுகளில் 260 பேர் படிக்கின்றனர். அங்கு 32 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 2.92 கோடி ஊதியத்துக்குச் செலவிடப்படுகிறது.

குறிப்பாக ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் 260 பேருக்கு 32 பேரே பணியில் உள்ளனர். பெண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் 65 மாணவிகளுக்கு 26 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இரு பயிற்சி நிலையங்களையும் இணைத்துப் பயிற்சி அளித்தால் இரு நிர்வாகப் பிரிவுகளால் அரசுக்கு ஏற்படும் செலவு குறையும். பிற துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப கூடுதல் நிர்வாகப் பிரிவு ஊழியர்களைப் பணியிட மாற்றம் செய்யலாம் என்று முதல்வர், ஆளுநருக்கு மனு அளித்துள்ளேன்".

இவ்வாறு ரகுபதி குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x