Published : 28 Jan 2020 10:35 AM
Last Updated : 28 Jan 2020 10:35 AM

ஜன.28: மெட்ராஸுக்கு தொலைபேசி அறிமுகமான தினம்

1882-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி மெட்ராஸுக்கு தொலைபேசிகள் அறிமுகம் செய்யப்பட்டன.

அறிவியலாளர் அலெக்சாண்டர் கிரஹாம் பெல் கண்டுபிடித்த தொலைபேசிக்கு, 1876-ல் காப்புரிமை கிடைத்தது. இதுவே நவீன தொலைத்தொடர்பு சாதனங்களுக்கு தொடக்கமாக மாறியது. தற்போது அறிவியல் துறையில் மேம்பட்டிருக்கும் பெரும்பாலான சாதனங்கள் மேற்கத்திய நாடுகளில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதில் காலனி ஆட்சியின் போது ஆங்கிலேயர்களால் அந்த சாதனங்கள் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டன. எனினும் தொலைபேசி என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே மெட்ராஸில் தொலைபேசிகளின் சத்தம் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. தொலைபேசித் தொடர்பை அமைப்பதற்கு 1881-ல் ஓரியன்டல் தொலைபேசி நிறுவனத்துக்கு இந்திய அரசு அனுமதி வழங்கியது. 19-11-1881 அன்று பாரிமுனையில் உள்ள எர்ரபாலு செட்டித் தெருவில் இந்தியாவின் முதல் தொலைபேசி இணைப்பகம் தொடங்கப்பட்டது. பின்னர் 1882 ஜனவரி 28-ம் தேதி மேஜர் ஈ.பேரிங் மூலம் மெட்ராஸில் தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

முதல்கட்டமாக கல்கத்தா, மெட்ராஸ், பம்பாய் மற்றும் தற்போதைய மியான்மரில் உள்ள ரங்கூன் ஆகிய நகரங்களுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டன. புதிதாக தொலைபேசி இணைப்பகம் தொடங்கப்பட்ட சமயத்தில், சுமார் 4 லட்சம் மக்கள் மெட்ராஸில் வசித்தனர். எனினும் அவர்களில் வெறும் 17 பேர் மட்டுமே தொலைபேசியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. எனினும் அந்த ஆண்டு இறுதியில் இந்த எண்ணிக்கை மெல்ல உயர்ந்தது.

ஆரம்பத்தில் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த தொலைபேசி ஒயர்கள், பல சமயங்களில் அறுந்து தொடர்பில் சிக்கலை ஏற்படுத்தின. இதைத் தொடர்ந்து பூமிக்கு அடியில் கேபிள்களைப் புதைத்துப் பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டது. படிப்படியாக தொலைபேசியின் தேவையைப் புரிந்துகொண்ட அரசு, தானே தொழிலை எடுத்து நடத்துவதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து 1947-ம் ஆண்டில் இருந்து மெட்ராஸ் தொலைபேசி பரிமாற்றத்தில் பெண்கள் பணிபுரியத் தொடங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x