Published : 28 Jan 2020 07:53 AM
Last Updated : 28 Jan 2020 07:53 AM

தேர்வுக்குத் தயாரா? - முழு மதிப்பெண்ணுக்கு பாடங்களை முழுமையாக படிப்போம்!

தொகுப்பு: எஸ்.எஸ்.லெனின்

பிளஸ் 1 வணிகவியல்

உள்ளிருந்து கேட்கப்படும் வினாக்கள், உருவாக்கப்பட்ட வினாக்கள், உயர் சிந்தனைக்கான வினாக்கள் என புதிய வினாத்தாள் மாதிரியில், புதிய ரக வினாக்களை மாணவர்கள் எதிர்கொள்ள உள்ளனர். இவற்றுக்கென தனியாக படிப்பதைவிட, பாடங்களை முழுமையாக வாசித்துபுரிந்துகொள்வதும், படிப்பதுமே உதவி கரமாக அமையும்.

வினாத்தாள் அமைப்பு

90 மதிப்பெண்களுக்கான பிளஸ் 1வணிகவியல் வினாத்தாள் 4 பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒரு மதிப்பெண் பகுதி 20 வினாக்களுடன் உள்ளது. 2 மற்றும் 3 மதிப்பெண் பகுதிகளில் கொடுக்கப்பட்ட தலா 10 வினாக்களிலிருந்து தலா 7-க்கு பதிலளிப்பதாகவும், அவற்றில் தலா ஒன்று கட்டாய வினாவாகவும் அமைந்திருக்கும். ‘அல்லது’ வகையிலான 7 வினாக்களுடன் 5 மதிப்பெண் பகுதி உள்ளது.

உள் வினா- கட்டாய வினா

ஒரு மதிப்பெண் பகுதியில் முழு மதிப்பெண் பெறுவதற்கு, பாடங்களின் பின்புறம் உள்ள வினாக்களை நன்கு படிப்பதுடன், அவற்றின் உள்ளிருந்தும் வினாக்களை உருவாக்கி பதிலளித்துப் பழக வேண்டும். இதற்கு அம்மாதிரியான உள் வினாக்கள் மற்றும் உயர் சிந்தனை வினாக்களை தனியாகத் தொகுத்து படிப்பது நல்லது. 2 மற்றும் 3 மதிப்பெண் பகுதிகளுக்கு பாடப்பகுதியின், ‘வரையறை, பண்புகள், பொருள் கூறல், வேறுபாடுகள்’ உள்ளிட்ட வினாக்களை குறிவைத்து படிக்கலாம்.

2 மற்றும் 3 மதிப்பெண் பகுதியின் கட்டாய வினாக்கள் பொதுவாக கருத்துரு வினாவாகவோ, ஆம்/இல்லை என்பதாக விடையளிப்பதாகவோ அமைந்திருக்கலாம். பாடப்பகுதிகளை முழுவதுமாக படிப்பதும், அம்மாதிரியான வினாக்களை உரிய இடங்களில் சுயமாக எழுப்பி விடையளிக்க முயற்சிப்பதும் கட்டாய வினாக்களின் மதிப்பெண்ணுக்கு உதவும்.

5 மதிப்பெண் பகுதியில் முழு மதிப்பெண் பெறுவதில், சாய்ஸ் வினாக்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. நன்கறிந்த விடைகளை தேர்வு செய்து எழுதுவதுடன், முழு மதிப்பெண்ணுக்கு வாய்ப்புள்ள, எளிமையான வினாக்களுக்கு முன்னுரிமை தரலாம். அதிலும் குறிப்புச் சட்டம் அமைத்து விடைகளை தெளிவாகவும், ஆழ்ந்த கருத்துகளுடனும் எழுதுவது மதிபெண் உயர்வுக்கு வழி செய்யும்.

தேர்ச்சி நிச்சயம்

பாடங்களின் பின்னுள்ள வினாக்களில் இருந்தே ஒரு மதிப்பெண் பகுதிக்கு முழுமையாகத் தயாராகலாம். இங்கிருந்தே ஒரு மதிப்பெண் பகுதியின் சுமார் 15 வினாக்கள் வரைகேட்கப்படலாம். 1,2,3,7,8 ஆகிய அலகுகளின் குறு மற்றும் சிறுவினாக்கள் பகுதியில் முழுமையாக தயாராவது 2 மற்றும் 3 மதிப்பெண்களுக்கு உதவும். இவற்றுடன் முதல் 3 அலகுகளின் எளிமையான 5 மதிப்பெண் வினாக்களுக்கு தயார் செய்தால் தேர்ச்சி உறுதியாவதுடன், கூடுதல் மதிப்பெண்களும் சாத்தியமாகும்.

அதிக மதிப்பெண்களுக்கு

முழு மதிப்பெண் எடுக்க விரும்பும் மாணவர்கள், அனைத்து அலகுகளுக்கும் உரிய கவனம் தந்து படிப்பது அவசியம். புத்தகத்தின் பின்னுள்ள வினாக்களை நன்கு படிப்பதுடன், அனைத்துப் பாடங்களையும் வரிக்குவரி முழுமையாக வாசித்து பொருளறிந்து உள்வாங்குதல் நல்லது. அவ்வாறு புரிந்துகொண்ட பகுதிகளில் இருந்து உயர் சிந்தனைக்கான வினாக்கள் தேர்வில் அமையும்போது சுயமாக விடையளிப்பது எளிதாகும்.

விடைகளை நீளப் பத்திகளில் எழுதுவதை விட, பாயிண்டுகளின் அடிப்படையில் சொந்த நடையிலும் எழுதுவது நல்லது. அவ்வாறு எழுதும்போது பாடங்களில் வழங்கப்பட்டுள்ள முக்கிய சொற்களை பொருள் மாறாது எழுதுவது அவசியம். 5 மதிப்பெண் வினாக்களுக்கு பதிலளிக்கையில், உரிய குறிப்புச் சட்டம் அமைந்து விடைகளை மிகவும் தெளிவாக எழுதுவது முழு மதிப்பெண் தரும்.

திருப்புதல்

மாதிரி வினாத்தாள்களின் அடிப்படையில் ஒருசில முழுமையான தேர்வுகளை எழுதிப் பார்ப்பது, தேர்வறை தடுமாற்றங்களை தவிர்க்க உதவும்.

பாடங்களில் இடம்பெற்றுள்ள QR code செயல்விளக்கம் வாயிலாகவும் கூடுதல் பாடக்கருத்துகள் மற்றும் விளக்கங்களைப் பெறுவது படைப்பு வினாக்களை எதிர்கொள்ள உதவும். திருப்புதலில் வினாக்களுக்கான விடைகளை படிப்பதுடன், அட்டவணை, தலைப்புகள், துணைத்தலைப்புகள், குறிப்புச் சட்டங்களை நேரம் ஒதுக்கி பலவரகளை பாடநூலில் குறிப்பிட்டவாறு அப்படியே எழுதுவது அவசியம். தற்போது நடைபெற்று வரும் மாதிரித் தேர்வுகளை வாய்ப்பாக பயன்படுத்தி, பொதுத்தேர்வுக்கான அனுபவத்தை பெறலாம். காலாண்டு, அரையாண்டு, மாதிரி மற்றும் அலகுத் தேர்வுகளின் வினாக்களுக்கு முன்னுரிமை அளித்து அவற்றுக்கு முழுமையாக விடையளித்துப் படிப்பதும் எழுதிப் பார்ப்பதும் அவசியம். இவற்றுக்கு அடுத்தபடியாக, ஆசிரியர் குறிப்பிட்டுள்ள முக்கிய வினாக்களையும் படிப்பது திருப்புதலை முழுமையாக்கும்.

நேர மேலாண்மை

ஒரு மதிப்பெண் பகுதிக்கு 20 நிமிடங்கள் ஒதுக்குவதுடன், 2 மதிப்பெண் பகுதிக்கு 30, மூன்று மதிப்பெண் பகுதிக்கு 40, ஐந்து மதிப்பெண் பகுதிக்கு 70 என நிமிடங்களை அதிகபட்சமாக பிரித்து ஒதுக்கி தேர்வெழுதலாம். இந்த வகையில் எஞ்சிய 20 நிமிடங்களில் விடைத்தாள் சரிபார்த்தலை மேற்கொள்ளலாம். ஒரு மதிப்பெண் பகுதி சரிபார்த்தலில் வரிசை எண், விடையுடன் ஆப்ஷன் எழுதியிருப்பது ஆகியவற்றையும் சரிபார்ப்பது நல்லது.

- பாடக்கருத்துகள் வழங்கியவர்: லோ.சண்முகசுந்தரம், முதுகலை ஆசிரியர் (வணிகவியல்), அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வாலாஜாபாத், காஞ்சிபுரம் மாவட்டம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x