Published : 27 Jan 2020 11:09 AM
Last Updated : 27 Jan 2020 11:09 AM

சூர்யாவின் அடையாளம் 'அகரம்'; கார்த்தியின் அடையாளம் 'உழவன்': சிவக்குமார்

சூர்யாவின் அடையாளம் 'அகரம்' மற்றும் கார்த்தியின் அடையாளம் 'உழவன் பவுண்டேஷன்' என்று சிவக்குமார் தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார்.

அகரத்தின் தொலைவைக் கடந்துவர துணை நின்ற அறம் சார் மனிதர்கள், சமூக நலன்சார் கொடையாளர்கள், தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவர் குறித்து நினைவுகள் சூழ, அகரம் பத்தாண்டுகள் 'தடம் விதைகளின் பயணம்' நிகழ்வு நேற்று (ஜனவரி 26) நடைபெற்றது. இதில் சிவக்குமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் சிவக்குமார் பேசும் போது, "உங்களுக்கு எல்லாம் அகரம் இருக்கிறது. அதற்கு ஒரு ஹீரோ இருக்கிறது. அவருக்கு உறுதுணையாக இன்னொரு ஹீரோ இருக்கிறார். ஆனால், நான் தொடங்கிய போது எனக்கு யாரும் கிடையாது. பிறந்து 1 வயது ஆவதற்குள் அப்பா இறந்துவிட்டார். அவர் கருப்பா, சிகப்பா என்று தெரியாது. எனக்கு 4 வயதாகும் போது என் அண்ணன் இறந்துவிட்டான். ஊருக்குள் கடும் பஞ்சம். ஆனால், ஆளைக் கொல்லும் எருக்கல் செடி திரும்பிய பக்கமெல்லாம் இருக்கும். சாப்பிட்டு உயிர் வாழும் எதுவுமே விளையவில்லை.

நான் 5-வது பையன். என் அம்மா கஷ்டப்பட்டு வளர்த்ததினால் இன்று உங்கள் முன்னால் நிற்கின்றேன். நான் போயிருந்தால் அகரம், சூர்யா, கார்த்தி எதுவுமே இல்லை. ஆகையால் அந்த தாய்க்குத்தான் நன்றி சொல்லவேண்டும். நான் 2-ம் வகுப்பும், அக்கா 3-ம் வகுப்பும் படித்தோம். அப்போது இருவருக்கும் சேர்த்து ஸ்கூல் பீஸ் 5 ரூபாய். அப்போது 5 ரூபாய் என்பது ஒரு சவரன் தங்கத்துடைய பாதி விலை. அதைக் கொடுக்க முடியாததால் அக்காவை 3-ம் வகுப்புடன் நிறுத்திவிட்டார்கள்.

வீட்டில் ஒருவனது படிக்க வேண்டும் என்பதற்காக என்னைப் படிக்க வைத்தார்கள். தீபாவளி - பொங்கல் பண்டிகைக்கு புது உடை போட்டதில்லை. 10-ம் வகுப்பு படிக்கும் போது குரூப் போட்டோ எடுக்கப் பணமில்லை. 50 ஆண்டுகள் கழித்து உடன் படித்த சில நண்பர்கள், வாத்தியார்களை வைத்து குரூப் போட்டோ எடுத்தேன். இப்போது அந்த பள்ளியைத் தத்தெடுத்துக் கொண்டேன். நண்பர்களுடன் சேர்ந்து பணம் வசூலித்து 25 லட்சம் செலவில் பள்ளிக்கு வகுப்பறைகள் எல்லாம் கட்டிக் கொடுத்துள்ளேன். இப்போது அந்த அறக்கட்டளை நடந்து வருகிறது.

14 வயது வரை நான் பார்த்த சினிமா வெறும் 14 படங்கள் தான். அதற்குப் பிறகு ஓவியக் கல்லூரியில் சேர்ந்து இந்தியா முழுக்கச் சென்று ஓவியம் வரைந்து, பின்பு நடிகனானேன். 14 ஆண்டுகளில் 100 படங்கள் வரை நடித்து, பின்பு எம்.ஜி.ஆர் அவர்களுடைய கையால் 1980-ம் ஆண்டு சிவக்குமார் அறக்கட்டளையைத் தொடங்கினேன். அப்போது ஒரு படத்துக்கு 25 ஆயிரம் சம்பளம். அப்போது 12-ம் வகுப்பில் முதல் மார்க் எடுப்பவர்களுக்கு 1000 ரூபாய், 2-வது மார்க் எடுப்பவர்களுக்கு 750 ரூபாய், 3-வது பரிசு 500 ரூபாய் எனத் துவங்கினேன். பின்பு 25-ம் ஆண்டில் முதல் பரிசாக 50000 ரூபாய் வரை கொடுத்தேன்.

2006-ம் ஆண்டில் தான் அகரம் தொடங்கப்பட்டது. ஆனால், 40 ஆண்டுகளாக சிவக்குமார் அறக்கட்டளை நடந்து கொண்டிருக்கிறது. சிவக்குமார் அறக்கட்டளை தான் அகரம். ஆனால், அது வானளவுக்கு உயர்ந்துவிட்டது. சூர்யா 100 படங்கள் நடிக்கலாம், பல கோடிகள் சம்பாதிக்கலாம். ஆனால் நிலையான பெயர் என்பது சூர்யாவுக்கு அகரத்தின் மூலமாகத் தான் கிடைக்கும். அகரம் ஒன்று தான் சூர்யாவின் அடையாளம். அதே போல் உழவன் பவுண்டேஷன் தான் கார்த்தியின் அடையாளம். விவசாயம் வேண்டும். அது இல்லையென்றால் உயிருடன் இருக்க முடியாது" என்று பேசினார் சிவக்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x