Published : 27 Jan 2020 09:50 AM
Last Updated : 27 Jan 2020 09:50 AM

தேர்வுக்குத் தயாரா? - வணிகச் செய்திகளை வாசிப்பதும் மதிப்பெண்ணை உயர்த்தும்

தொகுப்பு: எஸ்.எஸ்.லெனின்

பிளஸ் 2 வணிகவியல்

தேர்வுக்கு அப்பால் நடைமுறை வாழ்க்கைக்கும் உதவும் பாடம் வணிகவியல். எத்தகைய பணிக்கு சென்றாலும், சொந்தமாக தொழில் புரிந்தாலும் வணிகவியல் அறிவு அடிப்படையாக நின்று உதவும்.

இந்த ஆர்வத்துடன் வணிகவியல் பாடத்தின் கருத்துக்களை அறிந்துகொள்ள முயல்வது, அப்பாடத்தின் உயர்சிந்தனை வினாக்களுக்கு சுயமாக விடையளிப்பது உட்பட உயர் மதிப்பெண்களுக்கும் உதவும்.

வினாத்தாள் அமைப்பு

90 மதிப்பெண்களுக்கான வணிகவியல் கருத்தியல் தேர்வின் வினாத்தாள், 4 பகுதிகளை கொண்டது. 20 வினாக்களுடன் ஒரு மதிப்பெண் பகுதி அமைந்துள்ளது. 2 மற்றும் 3 மதிப்பெண் வினாக்கள் தலா 10-லிருந்து 7வினாக்களுக்கு விடையளிப்பதாகவும், அவற்றில் ஒன்று கட்டாய வினாவாகவும் உள்ளது.‘அல்லது’ வகையிலான 7 வினாக்களுடன் 5 மதிப்பெண் பகுதி அமைத்திருக்கும்.

உள் வினாக்கள்

ஒரு மதிப்பெண் வினாக்கள், வேலை வாய்ப்புக்கான போட்டித்தேர்வுகளின் வினாக்களை அடியொற்றியே அமைகின்றன. பாட நூலின்பின்னிருக்கும் ஒரு மதிப்பெண் வினாக்களில்இருந்தே 12 முதல் 15 வினாக்களை எதிர்பார்க்கலாம். இதர வினாக்கள் உள்ளிருந்தே கேட்கப்படும். இவற்றில் 1 முதல் 6, மற்றும் 8ஆகிய அலகுகளிலிருந்து தலா 2 வினாக்களும், 10 வது அலகிலிருந்து குறைந்தது4 வினாக்களையும் எதிர்பார்க்கலாம்.

2 மதிப்பெண் வினாக்களுக்கு 2 முதல் 4 கருத்துக்களில் விடையளிக்க வேண்டும். பாடங்களின் பின்னிருக்கும் வினாக்களில் ஒட்டுமொத்தமாக 155 இரு மதிப்பெண் வினாக்கள் உள்ளன. அவற்றிலிருந்து 'வரையறு, வேறுபாடு, வரைவிலக்கணம், பொருள் தருக, என்றால் என்ன?’ என்பதான வினாக்கள் அதிகம் இடம்பெறும்.

3 மதிப்பெண் வினாக்களுக்கு 3 முதல் 6கருத்துக்களில் விடையளித்தாக வேண்டும். இதில் ‘சிறப்புக் கூறுகள், வேறுபாடு, காரணங்கள், காரணிகள், சிறு விளக்கங்கள், வகைகள்’ என்பதான வினாக்கள் கேட்கப்படுகின்றன. பாடங்கள் தோறும் ஒரு வினாவேனும் இடம்பெறும் என்றாலும், அலகுகள் 8 மற்றும் 10-லிருந்து தலா 2 வினாக்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.

5 மதிப்பெண் வினாக்களுக்கு 5 முதல் 10கருத்துக்களுடன் விடையெழுத வேண்டியிருக்கும். ‘சிறப்பியல்புகள், பணிகள், வேறுபாடு, கடமைகள், நன்மைகள், தீமைகள், வகைகள், கோட்பாடு’ என்பதான வினாக்களே இப்பகுதியில் இடம்பெற வாய்ப்புள்ளது. அலகுகள் தோறும் குறைந்தது ஒரு வினாவேனும் இடம்பெறும் என்றாலும், 4,8,10 ஆகியவற்றிலிருந்து கூடுதல் வினாக்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.

'பெட்டி’களில் உயர்சிந்தனை வினாக்கள்

வினாத்தாளின் 20 சதவீதம், உயர் சிந்தனைக்கான வினாக்களாகப் பாடங்களின் உள்ளிருந்தே கேட்கப்படுகின்றன. வினா விடையாக மட்டுமன்றி பாடங்களை முழுமையாக வாசித்துப் பொருளுணர்வதும், வினாக்களை உருவாக்கி பதில் காண்பதும் இந்த உள் வினாக்களை எதிர்கொள்ள உதவும்.

பாடங்களின் பின்னுள்ள ’கலைச்சொற்கள், எதிர்கால கற்றல், நமது சிந்தனை, கற்றல் சூழ்நிலை’ ஆகிய பெட்டி தகவல்களிலிருந்தே 1மற்றும் 2 மதிப்பெண்களுக்கான உயர்சிந்தனைக்கான வினாக்கள் கேட்கப்படும். அத்தகவல்களை அடிப்படையாக் கொண்டு, புதிய வினாக்களை சுயமாக உருவாக்கி பயிற்சி பெறவேண்டும்.

தேர்ச்சி நிச்சயம்

புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு முக்கியத்துவம் தந்துமுழுமையாக படிப்பதுடன், அவற்றை அவ்வப்போது எழுதிப் பார்த்தும் திருப்புதல் செய்வதும் அவசியம். மேலும் வணிகவியலின் எளிமையான அலகுகளான 1, 6, 10 ஆகியவற்றில் கவனம் செலுத்திப் படிக்க வேண்டும்.இவ்வாறு தயாரானால் தேர்ச்சி உறுதியாவதுடன், 50 மதிப்பெண் வரை பெறுவது சாத்தியமாகும். மேலும் 3 மற்றும் 4 அலகுகளையும் சேர்த்துக்கொண்டால் கூடுதல் மதிப்பெண்களைக் குவிக்கவும் வாய்ப்பாகும்.

அதிக மதிப்பெண்களுக்கு

அதிக மதிப்பெண் எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு ஒரு மதிப்பெண் பகுதி சவாலாக உள்ளது. இதற்கு அனைத்துப் பாடங்களையும் முழுவதுமாக வாசித்து, முக்கியமான இடங்களை அடிக்கோடிட்டு திருப்புதல் செய்வது உதவும். மாதிரி வினாத்தாளின் ஒரு மதிப்பெண் பகுதிகளில், வினாவுக்கு அளிக்கப்படும் 4 விடைகளில், ஒவ்வொரு விடைக்குமான தனி வினாக்களை உருவாக்கி படிக்கும் உத்தியும் உதவும்.

முழு மதிப்பெண் பெற அனைத்து அலகுகளையும் முழுமையாக படித்தாக வேண்டும். இவற்றில் பாடங்களை வரிக்கு வரி வாசித்து, உள்ளிருந்து கேட்க வாய்ப்புள்ள வினாக்களை தனியாக தொகுத்துப் படிப்பதும் அவசியம்.

பாட நூலின் கருத்துக்களை படிப்பதுடன், அவை தொடர்பான தற்போதைய செய்திகள், தகவல்கள், அவற்றின் எதிர்கால நிலைகள் ஆகியவை தொடர்பாக வாசிப்பதும் மதிப்பெண்உயர்வுக்கு வழி செய்யும். எ.கா. நிறுவனச்சட்டம் (1956), அவை திருத்தப்பட்டது (2013) ஆகியவற்றுடன் இந்த சட்டங்களை நிறுவனங்கள் பின்பற்றலில் தற்போதைய நிலை தொடர்பான செய்திகள், விவாதங்கள் குறித்தும் அறிந்திருப்பது உதவும்.

அன்றாட வணிகச் செய்திகளை வாசிப்பதும் வணிகவியலில் மதிப்பெண்களை உயர்த்த உதவும். பாடக்கருத்துக்களுடன் பொருத்தமான அத்தகைய செய்திகள் மற்றும்கருத்துகளையும் சேர்த்து எழுதுவது, விரிவான விடையளிப்பில் முழு மதிப்பெண்ணுக்கு உதவும்.

கட்டாய வினா

கட்டாய வினாக்கள் எந்த அலகில் இருந்தும் கேட்கப்படலாம். புத்தகத்தின் பின்பகுதி வினாக்களில் இருந்து அவை இடம்பெற வாய்ப்பு குறைவு. உள்ளிருந்தோ, பாடங்களின் நிறைவிலுள்ள பெட்டித் தகவலில் இருந்தோ அவை கேட்கப்படலாம். எ.கா., ‘தாளின் இரண்டு பக்கமும் அச்சிடுதல் எவ்வகையான சந்தையிடுதல்?’ என்பதான வினாவுக்கு, அது தொடர்பான பாடத்தின் ஒரு வரி பெட்டித் தகவலை முதலில் அடையாளம் காண வேண்டும். பின்னர் ஆசிரியர் உதவியுடன் அதனை விவரித்து எழுதுவதற்கான கருத்துக்களாக தொகுத்துப் படிக்க வேண்டும்.

திருப்புதல்

தற்போது பள்ளிகளில் நடைபெற்று வரும் அலகுத் தேர்வு மற்றும் மாதிரித் தேர்வுகளை திருப்புதலுக்கான சிறந்த வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம். புத்தகத்தின் பின்னுள்ள வினாக்களை படித்தாலே 50 சதவீத மதிப்பெண்களை உறுதி செய்யலாம். மெல்லக்கற்போர் இனிவரும் நாட்களில் புதிதாகபடிப்பதை தவிர்த்து, இதுவரை படித்ததையும், ‘தேர்ச்சி நிச்சயம்’ பத்தியின் வழிகாட்டுதல்களையும் பின்பற்றினால் போதுமானது. அதிக மதிப்பெண்கள் பெற விரும்புவோர் மேற்சொன்ன பாடங்களுக்கு முக்கியத்துவம் தந்தும், இதரப் பாடங்களை தவிர்க்காமல் திருப்புதலை தொடர வேண்டும்.

- பாடக்குறிப்புகளை வழங்கியவர்: என்.கோவிந்தசாமி, முதுகலை ஆசிரியர் (வணிகவியல்), அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி மாவட்டம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x