Published : 24 Jan 2020 06:18 PM
Last Updated : 24 Jan 2020 06:18 PM

சொந்த செலவில் ஏசி வசதி: மாணவர்களை நெகிழ வைத்த கரூர் ஆட்சியர் அன்பழகன்!

சொந்த செலவில் ஏசி வசதி செய்துகொடுத்து, போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களை கரூர் ஆட்சியர் அன்பழகன் நெகிழ வைத்துள்ளார்.

கரூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மற்றும் கரூர் மாவட்ட நூலக ஆணைக்குழு இணைந்து நடத்திய 52-வது தேசிய நூலக வார நிறைவு விழா மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இளம்படைப்பாளர் விருது வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தலைமையில் மாவட்ட மைய நூலகத்தில் நேற்று நடைபெற்றது.

போட்டித் தேர்வுகளுக்குத் தங்களை தயார்படுத்திக்கொள்ளும் மாணவர்கள் படிக்கும்போது வெளிப்புறச்சத்தங்களை தவிர்த்து அமைதியான சூழலில், ஒரே சிந்தனையுடன் படிப்பதற்காக போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்யும் அறையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன், தனது சொந்த செலவில் ரூ.66,000 மதிப்பில் குளிர்சாதனக் கருவிகளை வழங்கினார்.

அதைத் திறந்து வைத்துப் பேசிய மாவட்ட ஆட்சியர், ''கட்டுரை மற்றும் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இளம் படைப்பாளர் விருது வழங்கினார். அதைத் தொடர்ந்து அவர் பேசியது,

நூலகம் அறிவுக்கு வழிகாட்டுவதுடன் வாழ்க்கைக்கும் வழிகாட்டும் இடமாக விளங்குகிறது. இணைய தளத்தில் அனைத்துத் தகவல்களும் கிடைக்கும் எனக் கூறினாலும், அவற்றை 90 சதவீதம் பொழுதுபோக்கு சார்ந்தே பயன்படுத்துகின்றனர். அதனைப் பயனுள்ளதாகப் பயன்படுத்துபவர்கள் மிகக் குறைவு. வாழ்வில் குறிக்கோளுடன் திட்டமிட்டு கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்.

ஒரு அரசுப் பள்ளி மாணவி எதிர்காலத்தில் என்னவாகவேண்டும் எனக் கேட்டபோது மாவட்ட ஆட்சியராக வேண்டும் என எழுதியிருந்தார். அவர் எழுதியதைப் படித்தேன். அதில் நிறைய எழுத்துப் பிழைகள் இருந்தன. ஆனால், அவர் குறிக்கோளில் பிழையில்லை. ஆகையால்தான் அந்த மாணவியை அழைத்து எனது இருக்கையில் அமர வைத்து அவரது குறிக்கோளை அடையும் வகையில் வாழ்த்து தெரிவித்து ஊக்கப்படுத்தினேன்'' என்றார்.

நிகழ்ச்சியில், வாசகர் வட்ட துணைத் தலைவர் வி.விமலாதித்தன் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட நூலக அலுவலர் (பொ) அ.பொ.சிவக்குமார் வரவேற்றார். மாவட்ட மைய முதல் நிலை நூலகர் ப.மணிமேகலை நன்றி கூறினார். மாவட்ட மைய நூலகர் செ.செ.சிவக்குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ரா.ராஜேந்திரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x