Published : 24 Jan 2020 01:15 PM
Last Updated : 24 Jan 2020 01:15 PM

உங்களால் ஊக்கம் பெறுகிறேன்: தேசிய விருது பெற்ற சிறுவர்களிடம் பிரதமர் மோடி நெகிழ்ச்சி

உங்களால் உற்சாகம்; ஊக்கம் அடைகிறேன் என்று தேசிய விருது பெற்ற சிறுவர்களிடம் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தேசிய குழந்தைகள் விருதானது தற்போது பால சக்தி புரஸ்கார் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. கண்டுபிடிப்புகள், சமூக சேவை, புலமை, விளையாட்டு, கலை, கலாச்சாரம் மற்றும் தைரியமான செயல்களுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. பதக்கம், ரூ.1 லட்சம் ரொக்கம், சான்றிதழ் ஆகியவை இந்த விருதில் அடக்கம்.

கொள்ளையர்களிடமிருந்து ரஷ்யரைக் காத்த சிறுவன் இஷான் சர்மா, இளம் பியானோ கலைஞர் கெளரி மிஸ்ரா, புதுச்சேரியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் வெங்கட சுப்ரமணியன் உள்ளிட்ட 49 சிறுவர்களுக்கு பால் சக்தி புரஸ்கார் விருது கடந்த 22-ம் தேதி குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது.

விருது பெற்ற 49 சிறுவர்களையும் பிரதமர் மோடி, தனது இல்லத்தில் இன்று (ஜன.24) சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது, ''சமூகம் மற்றும் நாட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமை குறித்து விழிப்புணர்வுடன் இருக்கிறீர்கள். இதைப் பார்க்கவே பெருமையாக உள்ளது.

நீங்கள் எல்லோரும் அறிமுகப்படுத்தப்பட்டபோது, நான் உண்மையிலேயே வியப்படைந்தேன். இந்த சின்ன வயதிலேயே வெவ்வேறு துறைகளில் நீங்கள் ஆற்றிய பணிகள் பாராட்டுக்குரியவை.

இளம் வீரர்களாகிய உங்களின் வீரதீரச் செயல்கள் குறித்துக் கேள்விப்படும் போதெல்லாம், உற்சாகமும் ஊக்கமும் பெறுகிறேன். நிறையத் தண்ணீர் குடியுங்கள், பழச்சாறு எடுத்துக் கொள்ளுங்கள். உடல்ரீதியாக சுறுசுறுப்புடன் இயங்குங்கள்'' என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x