Published : 24 Jan 2020 12:10 PM
Last Updated : 24 Jan 2020 12:10 PM

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு: சாதிச் சான்றிதழ் வாங்க வரிசையில் நிற்கும் பெற்றோர்கள்; அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் துணைத் தலைவர் மகேந்திரன்: கோப்புப்படம்

சென்னை

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு அறிவித்திருப்பதன் மூலம், கிராமப்புற மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக, மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் இன்று (ஜன.24) வெளியிட்ட அறிக்கையில், "ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்புக் கல்வியாண்டில் இருந்து பொதுத் தேர்வு என்கிற அரசின் அறிவிப்பு வந்தவுடனேயே அது மாணவர்களுடைய கல்விக்குப் பாதகம் விளைவிப்பது என்று மக்கள் நீதி மய்யம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது.

முக்கியமாக இந்தப் பொதுத்தேர்வு முறையின் மூலமாக மாணவர்களின் தேர்ச்சியைக் கணிக்கக்கூடாது என்கின்ற நம் நிலைப்பாட்டையும் கூறியிருந்தோம். இன்று அதே பொதுத்தேர்வுக்காக பல பெற்றோர்கள் தாசில்தார் அலுவலகங்களில் சாதிச் சான்றிதழ் வாங்க நிற்க வேண்டிய அவல நிலைக்கு ஆளாகியிருகின்றனர்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை வளப்படுத்தும் செயல்பாடுகளை விட்டுவிட்டு, தேர்வெழுத சாதிச் சான்றிதழுக்கு வரிசையில் நிற்கும் நிலை அவசியம் தானா?

நம் பள்ளிக் கல்வியின் தரத்தை சர்வதேச அளவில் உயர்த்த வழிவகை செய்வதில் கவனம் செலுத்தாமலும், சிறுவயதில் மாணவர்கள் பள்ளிக்கு வரும் ஆர்வத்தினை அதிகரிக்கத் தேவையான வழிகள் குறித்து ஆராய்வதை அலட்சியப்படுத்தியும் அடிப்படைக் கல்வி கற்பதற்குக் கூட தடைகளைத் தொடர்ந்து ஏற்படுத்துகின்றன நம் அரசுகள்.

இம்மாதிரியான திட்டங்கள் மூலம் மாணவர்களை அதுவும் குறிப்பாக கிராமப்புற மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் அரசை மக்கள் நீதி மய்யம் வன்மையாகக் கண்டிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x