Published : 24 Jan 2020 10:30 AM
Last Updated : 24 Jan 2020 10:30 AM

மூன்றாம் வகுப்பு மாணவிக்கு 450 சிட்- அப் தண்டனை: தனியார் டியூசன் ஆசிரியை மீது வழக்கு

கோப்புப்படம்

தானே

மகாராஷ்டிரா மாநிலத்தில் 3-ம் வகுப்புபடிக்கும் மாணவி வீட்டுப்பாடம் எழுதாததால், 450 சிட்- அப் தண்டனை வழங்கிய தனியார் டியூசன் ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர்அதேபகுதியில் உள்ள தனியார் டியூசன்மையத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில், மாணவியின் தாயார், நயா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை நேற்று அளித்தார். அதில், “தனது 8 வயது மகள், லதா என்ற ஆசிரியையின் டியூசன் மையத்தில் பயிற்சி பெற்றுவருகிறாள். இந்நிலையில், கடந்த சிலநாட்களுக்கு முன்பாக வீட்டுப்பாடத்தை முடிக்காமல் சென்றதாக தனது மகளை கரும்பு குச்சியால் ஆசிரியை தாக்கியுள்ளார்.

மேலும், 450 சிட்- அப் (தோப்புக்கரணம் போன்ற தண்டனை) கொடுத்துள்ளார். இதனால், தனதுமகளின் கால்களில் வீக்கம் ஏற்பட்டு நடக்க முடியவில்லை. மேலும், உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள். எனவே, ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

குழந்தை பாதுகாப்பு சட்டம்

இந்த சம்பவம் குறித்து நயா நகர் போலீஸார், குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆசிரியை மீது வழக்கு பதிவுச் செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆசிரியர்கள் பேச்சை மாணவர்கள் கேட்கவேண்டும், அப்போதுதான் திறன் வாய்ந்த சமூகத்தை உருவாக்க முடியும் என்றும், தவறு செய்யும் மாணவர்களுக்கு கடுமையாக தண்டனை வழங்கக்கூடாது என்றும் இருவித கருத்துக்களாக இச்சம்பவம் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x