Published : 23 Jan 2020 06:47 PM
Last Updated : 23 Jan 2020 06:47 PM

தேசிய விருது பெற்ற சிறுவர்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி

கோப்புப்படம்

குடியரசுத் தலைவர் கையால், பால சக்தி புரஸ்கார் என்னும் தேசிய விருது பெற்ற 49 சிறுவர்களை பிரதமர் மோடி அழைத்துப் பேச உள்ளார்.

பழங்குடியினக் கலைஞர்கள், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப் பணித் திட்ட தன்னார்வலர்கள் மற்றும் அலங்கார ஊர்தி கலைஞர்கள் வரவேற்பு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார்.

இதுதொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

''பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் 2020 விருது பெற்ற 49 குழந்தைகளை பிரதமர் நரேந்திர மோடி, நாளை (ஜன.24) அன்று சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.

விருதுபெற்ற 49 பேரும், புதுச்சேரி, ஜம்மு & காஷ்மீர், மணிப்பூர் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த தலா ஒருவர் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர்.

கலை, கலாச்சாரம், புதுமையான கண்டுபிடிப்புகள், கல்வித் திறன், சமூக சேவை, விளையாட்டு மற்றும் வீர-தீர செயலுக்காக இந்த குழந்தைகள் விருது பெற்றுள்ளனர்.

புதுமை கண்டுபிடிப்புகள், கல்வித் திறன், சமூக சேவை, கலை & கலாச்சாரம், விளையாட்டு மற்றும் வீர-தீர செயலாற்றுவதில் சிறப்புமிக்க சாதனை படைத்த எந்தவொரு குழந்தையும், இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். உயர்மட்டக் குழு ஒவ்வொரு விண்ணப்பத்தையும் கவனத்துடன் பரிசீலித்து விருதுபெறுவோரை தேர்வு செய்யும்.

தேசிய மாணவர் படையினருடனும் கலந்துரையாடல்
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கவுள்ள பழங்குடியினக் கலைஞர்கள், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் & அலங்கார ஊர்தி கலைஞர்கள் 1,730-க்கு மேற்பட்டோருக்கு 24.01.2020 அன்று வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதிலும் பிரதமர் பங்கேற்று அவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்''.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x