Published : 23 Jan 2020 11:39 AM
Last Updated : 23 Jan 2020 11:39 AM

உத்தர பிரதேச மாநிலத்தில் 2 குழந்தைகளுக்கு 100 வயது: அதிகாரிகள் வழங்கிய சான்றிதழால் சர்ச்சை

உத்தரபிரதேச மாநிலத்தில் 2 வயது குழந்தைக்கு 102 என்றும், 4 வயது குழந்தைக்கு 104 என்றும் பிறப்புச் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பரோலி மாவட்டத்தில் அமைந்துள்ளது பேலா என்ற கிராமம். இங்கு வசித்து வரும் பவன் குமார், ஷுபா (4), சங்கேத் (2) என்ற தனது 2 மகன்களுக்கு பிறப்பு சான்றிதழுக்காக ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளார். பின்னர், கிராம அலுவலர்கள் நேரில்வர அறிவுறுத்தியதால் கிராம அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.

அங்கு இருந்த கிராம வளர்ச்சித்துறை அதிகாரி சுஷில் சந்த் அக்னிஹோத்ரி மற்றும் தலைமை அலுவலர் பிரவிண் மிஸ்ரா ஆகியோர் பிறப்பு சான்றிதழ் வழங்குவதற்காக ரூ. 500 லஞ்சமாக தரும்படி கேட்டுள்ளனர்.

ஆனால், லஞ்சம் தர முடியாது என்றுபவன் கூறியுள்ளார். இதனால், பவனைபழிவாங்கும் நோக்கத்தில் அரசு அதிகாரிகள் செய்த காரியம், நாடு முழுவதும் பெரும் கேலிக்கு உள்ளாகியுள்ளது.

அதாவது, பவன் குமாரின் மகன்களான ஷுபா, 1916-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ம் தேதி பிறந்தார் என்றும், இளைய மகன் சங்கேத் 1918-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி பிறந்தார் என்றும் பிறப்பு சான்றிதழ்களை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து, பரோலி நீதிமன்றத்தை நாடிய பவன் குமார் லஞ்சம் கொடுக்க மறுத்ததால், தவறாக சான்றிதழ் அளிக்கப்பட்டதாக புகார் மனு அளித்தார்.

இதனை விசாரித்த நீதிபதி, புகாரின் அடிப்படையில் குதார் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேஜ்பால் சிங் வழங்கு பதிவுச் செய்து, விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

கேவலம் லஞ்சத்துக்காக 2, 4 வயது குழந்தைகளுக்கு 100 வயது என்று பிறப்பு சான்றிதழ் கொடுத்த அதிகாரிகள் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x