Published : 23 Jan 2020 10:49 AM
Last Updated : 23 Jan 2020 10:49 AM

டேக்வாண்டோ தற்காப்புக்கலை பயிற்சியில் அலங்காநல்லூர் அரசு பள்ளி மாணவர்கள் கின்னஸ் சாதனை: முதல்வர், துணை முதல்வர் நேரில் வரவழைத்து பாராட்டு

டேக்வாண்டோ தற்காப்புக்கலை விளையாட்டுப் பயிற்சியில் கின்னஸ் சாதனை படைத்த அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்தனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் 760 பேர் படிக்கின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பிராக்ரன்ஸ் லதா, உடற்கல்வி ஆசிரியர் தா.காட்வின் ஆகியோரின் முயற்சியால் பள்ளி மாணவர்களுக்கு டேக்வாண்டோ என்னும் தற்காப்புக் கலை விளையாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கிராமப்புற மாணவர்கள் டேக்வாண்டோ விளையாட்டுப் பயிற்சியில் ஆர்வமுடன் கற்றுத் தேர்ந்தனர்.

இதில், கின்னஸ் சாதனை புரிவதற்கு 50 மாணவர்கள் தயாராயினர். மதுரை டேக்வாண்டோ அமைப்பின் தலைவர் நாராயணன், உடற்கல்வி ஆசிரியர் தா.காட்வின் ஆகியோர் மாணவர்களை தயார்படுத்தினர். தினமும் வகுப்பு முடிந்து மாலை 5.30 முதல் இரவு 7 மணி வரை தனிப்பயிற்சி அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் 50 மாணவர்கள் சேர்ந்து ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 456 கிக்குகள் செய்து கின்னஸ் சாதனை புரிந்தனர். கின்னஸ் சாதனை அமைப்பு ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 411 கிக்குகளை கணக்கில் எடுத்து சான்றிதழ் வழங்கியது.

தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் டேக்வாண்டோவில் கின்னஸ் சாதனை படைத்த அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை நேரில் வரவழைத்து பாராட்டி பரிசுகள் வழங்கினர்.

அப்போது, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார், எம்எல்ஏக்கள் மாணிக்கம், சரவணன், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் காட்வின், நல்லாசிரியர் விருதாளர் முருகேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x