Published : 23 Jan 2020 10:23 AM
Last Updated : 23 Jan 2020 10:23 AM

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் முப்பெரும் விழா; குடும்ப சூழலை நினைத்தால் தவறான எண்ணங்கள் எழாது: பள்ளி மாணவிகளுக்கு காவல் துறை அதிகாரி அறிவுரை

குடும்ப சூழலையும் பெற்றோரையும் நினைத்தால் மனதில் தவறான எண்ணங்கள் எழாது என்று திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பள்ளியில்நடந்த முப்பெரும் விழா மாணவிகளுக்கு காவல்துறை அதிகாரி அறிவுரை கூறினார்.

சிமெண்ட் கற்தளம் திறப்பு விழா, கொடையாளர்களுக்கு பாராட்டு விழா மற்றும் தேசிய, மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தலைமை ஆசிரியை ஸ்டெல்லாமேரி வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் பழனிசாமி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

திருப்பூர் வடக்கு காவல் ஆய்வாளர் கணேசன், விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி பேசியதாவது:

பள்ளியில் 8-ம் வகுப்புக்கு மேல்படிக்கும் மாணவிகளுக்கு அதிக அளவில் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒரு நிமிடம் உங்களது பெற்றோரையும், குடும்பச் சூழ்நிலைகளையும் நினைத்து பார்த்தால் தவறான எண்ணங்கள் மனதில் எழாது. நண்பர்களிடம் மட்டுமின்றி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் அனைத்து விதமான தகவல்களையும் பகிருங்கள்.

வகுப்பறையை ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையாக ஆசிரியர்களும், மாணவர்களும் மாற்ற வேண்டும். எந்தவொரு விஷயத்தையும் மனதில் தேக்கி, அழுத்தம் ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள். இதனால் படிப்பு பாதிக்கப்படும். இதன் விளைவாக, எதிர்காலமும் பாதிப்புக்கு உள்ளாகும்.

காவல்துறை சார்பில் ‘காவலன் ஆப்’ (செயலி) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். இந்த செயலியில் உள்ள SOS பட்டனை அழுத்தினால் போதும், உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்று சம்பவ இடத்துக்கு போலீஸ் ரோந்து வாகனம் விரைந்து வரும். ஆகவே அனைவரும் இந்த செயலியை பதவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

செல்போனை நல்லதுக்கு மட்டும் பயன்படுத்துங்கள். முகநூல், இணையத்தில் இருந்து வரும் எந்தத் தகவலும் உங்களுக்கு வேண்டாம். இந்தஇரண்டும் 99 சதவீதம் பெண்களின் மனநிலையை மாற்றுகின்றன. இணையத்தை ஆக்கப்பூர்வமான விஷயத்துக்கு மட்டும் பயன்படுத்துங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

விளையாட்டில் சாதனை

அஸ்ஸாமில் தேசிய அளவில் நடந்த தடகளப் போட்டியில் பிளஸ் 1 மாணவி வைஷாலி வெள்ளிப் பதக்கம் வென்றார். தேசிய அளவில் நடந்தகைப்பந்து போட்டியில் 8-ம் வகுப்பு மாணவி அஞ்சலி சில்வியா வெண்கலப் பதக்கம் வென்றார். மாநில அளவில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் மாணவி வனிதா வெற்றி பெற்றார்.

அதேபோல் இப்பள்ளி அணி மாவட்ட அளவில் கைப்பந்துப் போட்டியில் 3-ம் இடமும், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கபடி போட்டியில் மாநில அளவில் 3-ம் இடமும், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கபடி போட்டியில் மாநில அளவில் 2-ம் இடமும், கேரம், ஜூடோ மற்றும் அத்லெட்டின் பல்வேறு பிரிவுகளில் வெற்றிபெற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x