Published : 23 Jan 2020 08:17 AM
Last Updated : 23 Jan 2020 08:17 AM

இந்தியாவில் படிக்க வரும் மாணவர்களின் ஆங்கில திறனை பரிசோதிக்க டோஃபல் தேர்வு: கலாச்சார உறவுகள் கவுன்சில் அறிவிப்பு

ஆங்கில மொழித் திறனைச் சோதிக்கும் தேர்வு டோஃபல் (TOEFL) எனப்படுகிறது. இத்தேர்வில் ஆங்கிலத்தை வாசிக்கும் திறன், கேட்டு புரிந்துகொள்ளும் திறன், ஆங்கிலத்தில் பேசும் மற்றும் எழுதும் திறன் ஆகியவை சோதிக்கப்படுகின்றன. இந்த நான்கு விதமான சோதனைகளில் குறிப்பிட்ட மதிப்பெண்களைக் குவித்தால் மட்டுமே வெளிநாட்டு மாணவர்கள் ஆங்கில வழிக் கல்வியை முன்னிலைப்படுத்தும் அயல் நாடுகளின் சிறந்த கல்வி நிலையங்களில் படிக்க முடியும்.

இதுவரை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 150 நாடுகளில் டோஃபல் தேர்வு முறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கான பிரத்தியேக டோஃபல் தேர்வு திட்டத்தை வடிவமைக்க முடிவெடுத்திருப்பதாக பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தியக் கலாச்சார உறவுகள் கவுன்சிலின் (ஐசிசிஆர்) தலைவர் வினய் சஹஸ்ரபுத்தி நேற்று அறிவித்தார். இது குறித்து டாக்டர் வினய் சஹஸ்ரபுத்தி நேற்று பேசுகையில், “தற்போதைய நிலையில் வெளிநாட்டு மாணவர்கள் படிக்க விரும்பும் நாடுகளின் பட்டியலில் 26-வது இடத்தில் இந்தியா உள்ளது.

உலகின் தலைசிறந்த 10 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இந்தியா இடம் பெறாதது ஏன் என்பது குறித்த தீவிர ஆய்வில் அரசு ஈடுபட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழுவுடனும் நிதி ஆயோக்குடனும் பலமுறை கலந்துரையாடினோம். அப்போது இந்தியா உலக கல்வி அரங்கில் பின்தங்கி இருப்பதற்கான காரணங்களில் ஒன்று, ஆங்கில மொழி அறியாத வெளிநாட்டு மாணவர்களை இந்தியக் கல்வி நிலையங்களில் அனுமதிப்பது என்று தெரியவந்தது.

ஏனென்றால் அந்த மாணவர்கள் ஆங்கில வழிக் கல்வியைப் பயிலத் தடுமாறுகிறார்கள். இதற்கு தீர்வு காண இந்தியாவுக்கான டோஃபல் தேர்வை வடிவமைக்க வேண்டும். சுற்றுலா பயணி விசாவில் இந்தியா வந்து சாஸ்திரிய சங்கீதம், நடனம், ஆயுர்வேதம், யோகா, பாரம்பரிய சமையல் கலை ஆகியவற்றை கற்று கொள்பவர்களையும் அயல்நாட்டு மாணவர்களின் பட்டியலில் இணைக்க வேண்டும்.

இந்தியாவை அதிக எண்ணிக்கையிலான அயல் நாட்டு மாணவர்களின் கல்வித் தலமாக மாற்றும் நோக்கில், சிம்பயாசிஸ் இன்டர்நேஷனல் மற்றும் சாவித்திரிபாய் பூலே பல்கலைக் கழகத்துடன் இணைந்து ‘டெஸ்டினேஷன் இந்தியா’ என்ற தேசிய மாநாட்டை புனேவில் வரும் 28, 29 ஆகிய தேதிகளில் நடத்த இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் திட்டமிட்டுள்ளது” என்றார்.

இந்நிலையில் 2022-ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு 2 லட்சம் வெளிநாட்டு மாணவர்களை வரவழைப்பதற்கான திட்டத்தில் ஐசிசிஆர் முழு வீச்சில் இறங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x