Last Updated : 22 Jan, 2020 06:00 PM

 

Published : 22 Jan 2020 06:00 PM
Last Updated : 22 Jan 2020 06:00 PM

மலைப் பள்ளத்தில் விழுந்த காரிலிருந்து மூன்று பேரைக் காப்பாற்றிய 9-ம் வகுப்பு மாணவிக்கு தேசிய விருது

தேசிய விருதுபெற உள்ள இமாச்சலப் பிரதேச மாணவி அலைகா.

மலைப்பள்ளத்தில் உருண்டு விழுந்த காரிலிருந்து வெளியே வந்து மேலும் மூன்று உயிர்களைக் காப்பாற்றிய இமாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மாணவி அலைகாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்க்ரா மாவட்டம் பாலம்பூர் நகருக்கு அருகிலுள்ள மராண்டாவில் அனுராதா பொது மூத்த மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார் அலைகா (15). இவர் கடந்த 2018 செப்டம்பரில் தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, அவரது கார் ​​சாலையிலிருந்து தடம் புரண்டு, மலையிலிருந்து உருண்டது. அப்போது சமயோசிதமாக யோசித்த அலைகா மூன்று பேரின் உயிரைக் காத்ததால், தற்போது அவர் இந்திய அரசின் தேசிய விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அலைகாவின் துணிச்சல்மிக்க செயல் குறித்து அவரது பள்ளி ஆசிரியர் ரேணு கட்டோச் ஐஏஎன்எஸ்ஸிடம் கூறியதாவது:

''அலைகா அவரது பெற்றோரின் ஒற்றைக் குழந்தை. அவர் மிகப்பெரிய பள்ளத்தில் உருண்டுவிழுந்து விபத்தைச் சந்தித்தபோது தனது தாய் மற்றும் தாத்தாவுடன் பயணம் செய்து கொண்டிருந்தார்.

சம்பவத்தன்று அலைகாவின் கார், ​​சாலையிலிருந்து தடம் புரண்டு, மலையிலிருந்து கிடுகிடு பள்ளத்தில் உருண்டோடி ஒரு மரத்தில் மோதி நின்றது. அப்போது அலைகா என்ன செய்வதென்று திண்டாடவில்லை. மாறாக உடனே சமயோசிதமாக யோசித்தார்.

காரில் வந்த மற்றவர்களான அவரது தாத்தா ஓய்வு பெற்ற கேப்டன் கே.கே. அவஸ்தி, அலைகாவின் தாய் சவிதா மற்றும் ஓட்டுநர் ஆகியோர் கடுமையான காயங்களால் மயக்கமடைந்தனர்.

தன்னுடன் காரில் அவர்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்று முடிவெடுத்திருந்தாலும் படுகாயமடைந்திருந்த அலைகாவால் அதை எப்படிச் செயல்படுத்துவதென சிறிதுநேரம் தவித்து, பிறகு தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தார்.

காயமடைந்த போதிலும், அலைகா காரில் இருந்து துணிச்சலுடன் வெளியே வந்து மலையில் சிரமத்துடன் முயன்று ஏறினார். உதவிக்காக வழிப்போக்கர்களை அழைத்தார்.

சரியான நேரத்தில் அலைகாவின் தைரியமான நடவடிக்கை மூன்று பேரின் உயிரைக் காப்பாற்றியது. அவரது துணிச்சலான செயலுக்காக அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது''.

இவ்வாறு அலைகாவின் பள்ளி ஆசிரியர் ரேணு கட்டோச் தெரிவித்தார்.

இந்த ஆண்டு தேசிய விருது வழங்கப்படும் பட்டியலில் அலைகாவுடன் 22 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x