Last Updated : 22 Jan, 2020 02:06 PM

 

Published : 22 Jan 2020 02:06 PM
Last Updated : 22 Jan 2020 02:06 PM

உணவு சார் மொபைல் செயலி, யூடியூப் சேனல்: அரசு மகளிர் கல்லூரியில் புது முயற்சி

எவ்வகை உணவைச் சாப்பிடுகிறோம், அது உடலுக்கு உகந்ததா என்ற விழிப்புணர்வுக்காக உணவு சார் மொபைல் செயலி, யூடியூப் சேனலை புதுச்சேரி, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி தொடங்கியுள்ளது.

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் Food label என்ற உணவுசார் மொபைல் செயலி, Food Anna என்ற யூடியூப் சேனல் இன்று தொடங்கப்பட்டது. இதைத் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஷாஜகான் தொடக்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், "நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை நோய்களே அல்ல; குறைபாடு மட்டுமே. அவற்றைச் சீராக்க உணவு, மனநிலை, மூச்சு விடுதல் ஆகியவை உடல்நிலைக்கு அடிப்படைத் தேவை. ரத்த அழுத்தம் அனைவருக்கும் சீராக இருக்காது. சூழலுக்கு ஏற்ப மாறுபடும்.

நீரிழிவு நோய் வராமல் தடுக்க முதலில் உணவை மென்று சாப்பிடுவது அவசியம். உணவு சார் கைபேசி மொபைல் ஆப், யூடியூப் சேனலில் வர்த்தக உணவு வகைகளுடன், நம் பாரம்பரிய உணவு வகைகள், நல் உணவுகளையும் அறிமுகப்படுத்துதல் அவசியம். ஐந்தறிவு விலங்குகள் கூட தனது உடலுக்கு ஒத்து வராத உணவு வகைகளை எடுத்துக் கொள்வதில்லை" என்று குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து மாணவிகளுக்கான மனத்திறன் ஆலோசனைக் குழுவை கல்வியமைச்சர் கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், "தற்போது கல்வி கற்கும் பலருக்கு மனக்கலக்கம், மனப் பதற்றம் ஏற்படுகிறது. இதில் சிலர் தவறான முடிவு எடுக்கின்றனர். குறிப்பாக கிராமங்களில் மகளிருக்கு மன பாதிப்பு அதிகளவில் ஏற்படுகிறது. கல்லூரிகளில் படிக்க வரும் பெண் குழந்தைகளுக்கு மனத்திறன் ஆலோசனை அவசியம். பெண்களுக்கு இந்த ஆலோசனையைத் தந்து உதவ வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதுகுறித்து மாணவர் ஒருங்கிணைப்பாளர் ஜோசபின் நிர்மலா ராணி, "மனத்திறன் ஆலோசனை வாரம் இருமுறை வழங்கப்படும்" என்று குறிப்பிட்டார்.

மொபைல் செயலி, யூடியூப் சேனலை உருவாக்கிய மனையியல் துறை ஆராய்ச்சி மாணவி வனஜா கூறுகையில், "மொபைல் செயலியில் முதல்கட்டமாக 350 பொருட்களின் விவரங்களை இணைத்துள்ளோம். யூடியூப் சேனலில் வீடியோக்களைப் பதிவிடத் தொடங்கியுள்ளோம். பலரும் பொருட்களின் எடை, விலையை மட்டும் பார்க்கின்றனர். அதிலுள்ள விவரங்களை அறியவே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். முன்னதாக கல்லூரி முதல்வர் சுப்ரமணி உரையாற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x