Published : 22 Jan 2020 10:20 AM
Last Updated : 22 Jan 2020 10:20 AM

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஜூன் 1 முதல் அமல்: மத்திய அமைச்சர் தகவல்

பாட்னா

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் நாடு முழுவதும் ஜூன் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அறிவித்துள்ளார்.

பிஹார் தலைநகர் பாட்னாவில் நேற்று செய்தியாளர்களிடம் ராம்விலாஸ் பஸ்வான் கூறியதாவது:

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஜூன் 1-ம்தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைப் படுத்தப்படும். இதனடிப்படையில் பயனாளிகள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்க முடியும். ஏற்கெனவே 16 மாநிலங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தொடங்கப்பட்டுவிட்டது. இதில் 12 மாநிலங்களில் ஜூன் 1 முதல் இத்திட்டம் முழுமையாக அமுலுக்கு வருகிறது.

ஆந்திரா, ஹரியாணா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் முழுமையாக அமலுக்கு வருகிறது. பிஹார், உ.பி., ஒடிசா மற்றும் சத்தீஸ்கரில் சில பகுதிகளில் இத்திட்டம் செயல்படுகிறது.

இங்கும் முழுமையாக இத்திட்டம் செயல்படும். 2020-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 35 கோடி பயனாளிகள் இத்திட்டத்தால் பயனடைவர். மேலும் 8 மாநிலங்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இவ்வாறு பஸ்வான் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x