Published : 22 Jan 2020 08:38 AM
Last Updated : 22 Jan 2020 08:38 AM

புத்தகங்களில் படிப்பதை வாழ்க்கையில் கடைபிடியுங்கள்: ஐஏஎஸ் அதிகாரி வெ.இறையன்பு அறிவுரை

புத்தகங்களில் படிப்பதை வாழ்க்கையில் கடைபிடியுங்கள் என்று சென்னை புத்தக கண்காட்சி விழாவில் ஐஏஎஸ் அதிகாரி வெ.இறையன்பு கூறினார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) 43-வது புத்தக கண்காட்சி சென்னைநந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 9-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலரும், அண்ணா மேலாண்மை நிலையத்தின் இயக்குநருமான வெ.இறையன்பு 'மனிதர்களை வாசிக்கிறேன்' என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒருவர் எப்போது பார்த்தாலும் புத்தகங்களை படிப்பதாலேயே அவரை அறிவாளி என்று சொல்லிவிட முடியாது. படிப்பதால் மட்டுமே ஒருவர் மேன்மை அடைந்துவிட முடியாது. நல்ல நூல்களை படிப்பதும் அவற்றை ஓய்வு நேரங்களில் சிந்திப்பதும், அதில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி பார்ப்பதும், அவற்றை வாழ்க்கையில் கடைபிடிக்க முயல்வதும்தான் ஒருவரை அறிவாளி ஆக்க முடியும்.

நிறைய வாசிக்கும்போது திருப்தி அடைந்துவிடுகிறோம். வாழ்க்கையில் அவற்றை கடைபிடிக்க வேண்டும் என்றோ, சொந்தமாக சிந்திக்க வேண்டும் என்றோ, நாமே அவற்றை வாழ்க்கையோடு தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும் என்றோ நினைப்பதில்லை. படிப்பவற்றை வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி பார்க்க வேண்டும் என்பதுதான் வாசிப்பின் நோக்கம். புத்தகங்களில் படிப்பதை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்.

நான் நாள்தோறும் நிறைய மனிதர்களைச் சந்திக்கிறேன். அவர்கள் ஏதோ ஒருவகையில் என் கண் முன்னால் பாடப்புத்தகமாக தெரிகிறார்கள். அவர்களை பார்க்கும்போது ஏதேனும் ஒருசெய்தியை, ஒரு மேன்மையை கற்கவேண்டியதாக இருக்கிறது.

யாரெல்லாம் பயணம் செய்யாமல்இருக்கிறார்களோ, அவர்கள் எல்லாம்இந்த உலகத்தை வாசிப்பது இல்லை.அவர்கள் தங்கள் இல்லத்தை, தங்கள் சமூகத்தை, தங்கள் வசிப்பிடத்தை, தங்கள் கிராமத்தை மட்டுமேஉலகம் என நினைக்கிறார்கள். நாம் எவ்வளவு தூரம் மக்களை சந்திக்கிறோமோ அவ்வளவு தூரம் மேன்மை அடைவோம்.

பல்வேறு பாதைகளில் பயணம் செய்கிறபோது பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்கிறோம். பிறருக்கு உதவுகிற மனிதர்களை, மற்றவர்களுக்கு உதவி செய்வதில் மகிழ்ச்சி அடைகிற மனிதர்களை, எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் பணியாற்றுகிற மனிதர்களை பார்க்கிறோம். காந்தி,காமராஜர் போன்ற மகத்தான மனிதர்கள் எல்லாம் மகத்தான செய்திகளை நமக்கு வழங்கியிருக்கிறார்கள். அதேபோல் சாமானிய மக்களும் ஏதோ ஒரு செய்தியை வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

செய்கிற பணியை சிறப்பாக செய்பவர்களை பார்த்து என்னை செதுக்கிக் கொள்கிறேன். பாத்திரம் கழுவுவதைக்கூட தோத்திரம் பாடுவதுபோல் செய்கிறவர்களையும், கற்களை உடைப்பதைக்கூட ஏதோ சிற்பங்களை செதுக்கிறவர்கள் போல் செம்மையாக செய்வோரையும் பார்த்தும் வியந்திருக்கிறேன். இத்தகை மனிதர்களை பார்க்கும்போது, எனது பணியை இன்னும்நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. இவ்வாறு இறையன்பு கூறினார்.

குஜராத் மாநில ஐஏஎஸ் அதிகாரியும், வெ.இறையன்புவின் சகோதரருமான வெ.திருப்புகழ் 'என் வாசிப்பு உலகம்'என்ற தலைப்பில் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x