Last Updated : 21 Jan, 2020 05:30 PM

 

Published : 21 Jan 2020 05:30 PM
Last Updated : 21 Jan 2020 05:30 PM

72 மணி நேரத்தில் 30 லட்சம் விதைப்பந்துகள் உருவாக்கும் மாணவர்கள்: சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக உலக சாதனை நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்ட மாணவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க 72 மணி நேரத்தில் 30 லட்சம் விதைப்பந்துகளை உருவாக்கும் உலக சாதனை நிகழ்ச்சி தொடங்கியது.

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மார்ட்டின் சேரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து இதனை ஏற்று நடத்துகிறது.

பூமியையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் அவசியத்தை உணர்த்தும் வகையிலும், ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமையாக்கவும், விதைப்பந்துகளின் முக்கியத்துவத்தை உலகம் முழுக்க பரவ வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காகவும் 30 லட்சம் விதைப்பந்துகளை உருவாக்கும் உலக சாதனை நிகழ்ச்சி இன்று ராமநாதபுரம் பட்டணம்காத்தான் நேஷனல் அகாடமி பள்ளியில் தொடங்கப்பட்டது.

நேஷனல் அகாடமி பள்ளிகளின் மாணவர்கள் மற்றும் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 2,500 பேர் இணைந்து 72 மணி நேரத்தில் (ஜன.21 முதல் 23 வரை) இந்த உலக சாதனை படைக்க உள்ளனர். இங்கு தயாரிக்கப்பட்ட அனைத்து விதைப்பந்துகளும், ராமநாதபுரம் மாவட்டத்திலேயே விதைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக சாதனை நிகழ்ச்சி தொடக்க விழா நேஷனல் அகாடமி பள்ளியில் நடைபெற்றது. ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் விதைப்பந்துகளை உருவாக்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

கூடுதல் ஆட்சியர் (ஊரக வளர்ச்சி முகமை) எம்.பிரதீப்குமார், ராமநாதபுரம் சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், மாணவர்கள் ராமநாதபுரம் மாவட்ட சுற்றுச்சூழலிற்கு உகந்த சீத்தாபழம், விளாம்பழம், கொய்யா, சரக்கொன்றை, மயில்கொன்றை, பூவரசன் ஆகிய 6 விதமான மரங்களின் விதைகளை பயன்படுத்தி, ஒரு விதைப்பந்திற்கு 4 விதைகள் வீதம், 3 நாட்களில் ஒரு கோடியே இருபது லட்சம் விதைகளைக் கொண்டு 30 லட்சம் விதைப்பந்துகள் உருவாக்க உள்ளனர்.

இம்மாணவர்களுக்கு பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளும், முத்துப்பேட்டை கவுசானல் கல்லூரி மாணவர்களும் உதவியாக செயல்படுகின்றனர்.

ஆட்சியர் பேசும்போது, "இயற்கையோடு இணைந்த மனித வாழ்விற்கு நீர், நிலம், சுற்றுச்சூழல் வளத்தினை மேம்படுத்தி பசுமையான சூழ்நிலையை ஏற்படுத்திட வேண்டும்.மாவட்டத்தை பசுமையாக்க முயற்சிக்க விதைப்பந்துகள் தயாரிக்கும் மாணவர்களுக்கு இம்மாவட்ட மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிகழ்வினை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் எனும் 4 உலக சாதனை நிறுவனங்கள் நேரில் ஆய்வு செய்து சான்றளிக்கவுள்ளன" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x