Published : 21 Jan 2020 05:09 PM
Last Updated : 21 Jan 2020 05:09 PM

துணை ஆட்சியர், டிஎஸ்பி: குரூப் 1 தேர்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது

துணை ஆட்சியர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட ஏராளமான முதன்மைப் பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. இதைத் தொடர்ந்து அதற்கான விண்ணப்பப் பதிவும் ஆன்லைனில் தொடங்கியுள்ளது. காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், வணிக வரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு நிலை பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் இதில் நிரப்பப்படும்.

குரூப்-1 முதல்நிலை எழுத்துத் தேர்வு ஏப்ரல் 5-ம் தேதி நடைபெறுகிறது. குரூப்-1 தேர்வில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த ஆண்டு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

18 துணை ஆட்சியர் பணியிடங்கள், காவல்துறை துணைக் கண்காணிப்பாளருக்கான 19 காலி இடங்கள், 10 வணிக வரித்துறை உதவி ஆணையர் பணியிடங்கள், 14 கூட்டுறவுத் துறை துணை பதிவாளர், 7 ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் பணியிடங்கள், மாவட்டத் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரி தலா ஒரு பணியிடம் உள்ளிட்டவை இந்த ஆண்டுக்கான அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து தேர்வர்கள் பிப்ரவரி 19-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப்-1 தேர்வு குறித்த கூடுதல் தகவல்களை டிஎன்பிஎஸ்சி இணையதளங்களான www.tnpsc.gov.in, www.tnpsc.exam.in, www.tnpsc.exam.net ஆகியவற்றில் தெரிந்துகொள்ளலாம்.

மாநிலத்தில் ஆட்சிப் பணி, காவல் பணிகளுக்காக குரூப் -1 தேர்வு முக்கியமாகக் கருதப்படுகிறது. உதவி கமிஷனர், டிஎஸ்பி, உதவி ஆட்சியர் என்பன போன்ற பணிகளுக்காக குரூப்-1 தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இவ்வாறு தேர்வு செய்யப்பட்டு ஆட்சிப் பணி, காவல் பணியில் பணியாற்றும் இவர்கள் 15 ஆண்டுகளுக்குப் பின் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்த்தப்படுகின்றனர். ஆகவே மாநில அளவில் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-1 தேர்வு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x