Published : 21 Jan 2020 02:39 PM
Last Updated : 21 Jan 2020 02:39 PM

காளிங்கராயன் வாய்க்கால் பாதுகாப்பு: பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மாரத்தான்

ஈரோடு காளிங்கராயன் வாய்க்காலைப் பாதுகாக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் மினி மாரத்தான் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஈரோட்டில் காளிங்கராயன் என்பவர் 738 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய வாய்க்கால், ஏராளமான மக்களுக்கு நீர்ப் பாசனத்தை அளித்து வருகிறது. ஈரோட்டைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகள், தங்களின் கழிவுகளை காளிங்கராயன் வாய்க்காலில் விடுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் வாய்க்கால் கடுமையாக மாசடைந்துவிட்டதாகவும் அதில் கலக்கும் தொழிற்சாலைக் கழிவுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

காளிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் கெட்டுப் போனதால் ஆரோக்கியத்தில் கேடு ஏற்படுகிறது. தொழிற்சாலைகள் தண்ணீரைச் சுத்திகரித்துப் பயன்படுத்த வேண்டும் என்று அண்மையில் நடிகர் கார்த்தி வேதனை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காளிங்கராயன் கால்வாயை மீட்டெடுக்கும் விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டது. இதையொட்டி பல்வேறு பள்ளிகளில் படிக்கும் ஏராளமான மாணவர்கள், கொடுமுடியில் நடைபெற்ற மினி மாரத்தான் நிகழ்வில் கலந்துகொண்டு ஓடினர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பொதுமக்களுக்கு விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இது தொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, ''காளிங்கராயன் வாய்க்காலில் இனியாவது சாயக் கழிவுகள் கலக்காமல் இருத்தல் வேண்டும். எங்களுக்குப் பழைய, மாசற்ற நிலம், நீர், காற்று வேண்டும். இதை வலியுறுத்தவே இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது'' என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x