Published : 21 Jan 2020 12:08 PM
Last Updated : 21 Jan 2020 12:08 PM

பயிலும் பள்ளிகளிலேயே 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு: சர்ச்சைகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் முற்றுப்புள்ளி

பயிலும் பள்ளிகளிலேயே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்து 5, 8-ம் வகுப்புக்கான தேர்வு மையங்கள் குறித்து நிலவி வந்த சர்ச்சைகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்டத் திருத்தங்களின்படி 5, 8-ம் வகுப்புகளுக்கு, தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும் மாணவர்களின் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படாது என தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. அதன்படி 5, 8-ம் வகுப்புக்கு ஏப்ரலில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.

இந்த வகுப்பு மாணவர்கள் முதல் முறையாகப் பொதுத்தோ்வு எழுதவுள்ளதால், பெற்றோரும் மாணவர்களும் அச்சத்தில் உள்ளனர். மறுபுறம் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் இன்றும் வெளியாகவில்லை. இத்துடன் தேர்வு மையங்கள் மாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியானதால் மாணவர்களிடையே குழப்பம் நீடித்தது.

இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் இன்று (ஜன. 21) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் கூறும்போது, ''மாணவர்களும் பெற்றோரும் அச்சமடையைத் தேவையில்லை. 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுத, அந்தந்தப் பள்ளிகளே தேர்வு மையங்களாகச் செயல்படும்.

5 பேர், 8 பேர் என எவ்வளவு குறைந்த மாணவர்கள் என்றாலும் அவர்கள் பயிலும் பள்ளியிலேயே பொதுத் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும். பொதுத் தேர்வு மையங்கள் மாற்றமில்லை என்று இன்று (ஜன. 21) மாலைக்குள் ஆணை பிறப்பிக்கப்படும்.

பொதுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்கள், அந்தந்தக் கல்வி மாவட்ட மையங்களில் சொந்தமாகத் தயார் செய்யப்பட்டு வழங்கப்படும். மாணவர்கள் சுலபமாகத் தேர்ச்சி பெறும் வகையில் தேர்வில் எளிதான கேள்விகள் மட்டுமே கேட்கப்படும்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x