Published : 21 Jan 2020 11:31 AM
Last Updated : 21 Jan 2020 11:31 AM

5, 8-ம் வகுப்புப் பொதுத் தேர்வு: பெற்றோர், மாணவரிடையே நீடிக்கும் குழப்பம்

5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நடைபெறும் மையங்கள் குறித்து பெற்றோர், மாணவரிடையே குழப்பம் நீடித்து வருகிறது.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, அனைத்து பள்ளி மாணவர்களும் 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி செய்யப்பட்டு வந்தனர். இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத் தொடர்ந்து மத்திய அரசு கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவை அமைத்தது. அக்குழு சமர்ப்பித்த தேசியக் கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கை அண்மையில் வெளியானது. அதில் 5,8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இதைக் கவனத்தில் கொண்ட தமிழக அரசு, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இந்தக் கல்வியாண்டில் இருந்தே அமல்படுத்தப்படும் என்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து தேர்வுக்கான தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையே பள்ளியில் இருந்து வேறு தேர்வு மையங்களுக்குச் சென்றே தேர்வெழுத முடியும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்ததாகத் தகவல்கள் வெளியாகின. எனினும் துறை அமைச்சர் செங்கோட்டையன் இதை மறுத்துள்ளார். அந்தந்தப் பள்ளிகளிலேயே தேர்வெழுதலாம் என்று அறிவித்தார்.

இந்நிலையில் தொடக்கக் கல்வி இயக்குனரகம் பள்ளிகளிலேயே தேர்வை நடத்த அனுமதி அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தேர்வு மற்றும் தேர்வு மையங்கள் குறித்து வெவ்வேறு தகவல்கள் ஊடகங்களில் தொடர்ந்து வெளியாவதால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இதுதொடர்பாக ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, '''இதுதொடர்பாக எந்தவொரு சுற்றறிக்கையும் எங்களுக்கு அளிக்கப்படவில்லை. எங்களுக்கே எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படாததால், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத நிலையில் உள்ளோம்'' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x