Published : 20 Jan 2020 05:57 PM
Last Updated : 20 Jan 2020 05:57 PM

அனிமேஷன் வடிவில் திருக்குறள்: குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க புதிய திட்டம்

திருக்குறளைக் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க அனிமேஷன் வடிவில் உருவாக்கப் புதிய திட்டம் கொண்டுவரப்படுவதாக திருநாவுக்கரசு ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை, நந்தனம் மைதானத்தில் நடைபெற்று வரும் 43-வது புத்தகக் கண்காட்சியில் காவல் நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு ஐபிஎஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். 'திருக்குறள் சொல்லும் வாழ்வியல் தீர்வுகள்' என்ற தலைப்பில் அவர் உரை நிகழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடையே திருநாவுக்கரசு ஐபிஎஸ் பேசும்போது, ''அறத்தைப் போதிக்கும் திருக்குறளை உலக மக்களிடம் கொண்டு சேர்ப்பது அவசியம். திருக்குறள் என்பது இந்த மண்ணுக்குக் கிடைத்த சாகாவரம். அதைப் படிக்கும்போதும் திருவள்ளுவரை நினைக்கும்போதும் நம்மை அறியாமல், மனதுக்குள் ஓர் உந்துதல் ஏற்படுகிறது.

மனத்தின் ஆற்றல் பெறுகிறது. இந்த உணர்வை அனைவரும் பெற வேண்டும். அதற்குத் திருக்குறளையும் அது தொடர்பான உலகின் ஏதாவது ஒரு மூலையில் இருந்து ஒரு கதையையும் எடுத்துக்கொள்கிறோம். அதற்கு அனிமேஷன் வடிவத்தையும் கொடுத்து வருகிறோம்.

அனிமேஷன் வடிவத்தில் ஒரு படைப்பு உருவாக்கப்படும்போது குழந்தைகள் ஆர்வத்துடன் கதை கேட்பார்கள். அதை மற்றவர்களிடத்திலும் சொல்வார்கள்'' என்று திருநாவுக்கரசு ஐபிஎஸ் தெரிவித்தார்.

தேனி மாவட்டம், ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு ஐபிஎஸ். சென்னை நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையராகப் பணியாற்றி வரும் அவர், தினமும் காலையில் பணிக்கு வந்தவுடன் போலீஸாரை அழைத்து அவர்களுக்கு தினமும் ஒரு திருக்குறளை தமிழ், ஆங்கிலத்தில் சொல்லி நடைமுறை வாழ்க்கையோடு கற்றுக் கொடுக்கிறார். வாட்ஸ் அப் மூலமாகவும் அவர் திருக்குறளைப் பரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x