Last Updated : 20 Jan, 2020 04:38 PM

 

Published : 20 Jan 2020 04:38 PM
Last Updated : 20 Jan 2020 04:38 PM

இளைஞர்கள் கடைப்பிடிக்க 5 மந்திரங்கள்: கிரண்பேடி

தூய்மை, பாதுகாப்பு, கல்வி, நாகரிகம் போற்றுதல், ஆரோக்கியம் என இளையோர் வாழ்வில் கடைப்பிடிக்க ஐந்து மந்திரங்களை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.

பழங்குடியின இளைஞர்கள் கலந்துகொள்ளும்12-வது இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியை புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று தொடங்கி வைத்தார். நேரு யுவகேந்திரா சார்பில் நடைபெறும் இந்நிகழ்வில் பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சிக்காக நாடு முழுவதும் 4 ஆயிரம் பழங்குடி இளையோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குழுவுக்கு 200 பேர் வீதம் 20 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் பல்வேறு மாநிங்களில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். அதன்படி புதுச்சேரியில் நடக்கும் நிகழ்ச்சியில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் பாதித்த 4 மாவட்டங்களில் இருந்து 200 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் வரும் 25-ம் தேதி வரை புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளுக்கு களப்பயணம் மேற்கொள்கின்றனர். கலை, கலாச்சாரம், கல்வி, வாழ்க்கை முறை, தொழில் முறையைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

இதற்கிடையே சத்தீஸ்கரில் இருந்து வந்த இளையோருக்கு இந்தி தெரியும் என்பதால் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்களுடம் இந்தியில் உரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது:

''வலிமையான நாட்டை உருவாக்க இளையோர் ஒற்றுமையுடன் செயல்படுதல் அவசியம். இதற்காக இளையோருக்கு ஐந்து மந்திரங்களைச் சொல்ல விரும்புகிறேன். முதலில் நாட்டைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். வீட்டிலிருந்தும், நம்மிலிருந்தும் தொடங்கி பொது வெளியிலிலும் தூய்மையை உறுதிப்படுத்த வேண்டும். முதலில் வீட்டில் கழிப்பறையைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். பொது இடங்களைக் கழிப்பறைகளாக்கக் கூடாது.

இரண்டாவதாக நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு ஆண், பெண் என இருபாலருக்கும் உண்டு. இதில் ஒவ்வொருவரின் பாதுகாப்பையும் இருபாலரும் பரஸ்பரம் உறுதிப்படுத்தி மரியாதை செலுத்துதல் அவசியம். பொதுச்சொத்து நம்முடையது என்ற எண்ணம் தேவை. அதைச் சேதப்படுத்துவது தவறு.

மூன்றாவதாக கல்வியைத் தேர்வுக்காக மட்டும் எனக் கருதக்கூடாது. கற்றல் வாழ்நாள் முழுக்கத் தொடர்தல் அவசியம். கல்வியின் மூலமே உங்களின் நடத்தை தெரியவரும். குறிப்பாக, தலையை அறிவுக்கும், இதயத்தை அன்புக்கும், கைகளைத் திறனுக்கும் எனப் பிரித்துக் கற்றறிதல் அவசியம்.

நான்காவதாக நமது நாகரிகத்தைப் போற்றுவதுஅவசியம். நம் பண்டைய கலாச்சாரத்தை அறிந்து போற்றுங்கள். இயற்கையை நேசித்தல், வணங்குதல் தொடங்கி நம் கலாச்சார, பண்டைய விழுமியங்களை அறிந்து நோக்குங்கள்.

ஐந்தாவதாக ஆரோக்கியமாக இருங்கள். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிறப்பாகச் செயல்பட முடியும். அதற்கு உடற்பயிற்சி அவசியம். இந்த ஐந்து மந்திரங்களை இளைஞர்கள் கடைப்பிடியுங்கள்''.

இவ்வாறு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x