Published : 20 Jan 2020 03:53 PM
Last Updated : 20 Jan 2020 03:53 PM

சந்திரயான் நிகழ்வில் என்னைக் கலந்துகொள்ள வேண்டாம் என்றனர்: பிரதமர் மோடி

பிரதமர் மோடி மற்றும் மாணவர்கள் இடையிலான கலந்துரையாடலில், பிரதமர் தொழில்நுட்பம், வெற்றி- தோல்வி குறித்துப் பேசினார்.

பிரதமர் மோடி 'பரிக்‌ஷா பே சார்ச்சா' என்ற பெயரில் 2018-ம் ஆண்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

3-வது ஆண்டாக இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடம் பிரதமர் மோடி பேசியதாவது:

''உங்களுடன் பேச, #withoutfilter என்ற ஹேஷ்டேகைத் தேர்ந்தெடுத்துள்ளேன். என்னிடம் நீங்கள் (மாணவர்கள்) திறந்த மனதுடன் பேசலாம். நீண்ட நாட்கள் நான் ஆட்சி நிர்வாகத்தில் ஓய்வின்றி இருந்தேன். மக்கள் இந்த வாய்ப்பை (பிரதமர்) அளிக்கும் முன்னால், முதல்வராகவும் இருந்தேன். இதுவரை ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வித்தியாசமான அனுபவங்களை எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால் யாராவது என்னிடம் உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சி எதுவென்றால், 'பரிக்‌ஷா பே சர்ச்சா' நிகழ்ச்சி என்பேன்.

தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவது என்பது மட்டுமே எல்லாமுமாக ஆகிவிடாது. தேர்வுதான் அனைத்தும் என்ற எண்ணத்தில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். கல்வி தாண்டிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் இல்லாத மனிதர்கள் ரோபோக்களாக மாறிவிடுவர். கவர்ச்சிகரமான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளில் மட்டுமே குழந்தைகளைச் சேர்க்கும் போக்கு, பெற்றோர்களிடையே அதிகரித்து வருகிறது. இது தவறு. குழந்தைகளுக்கு உண்மையிலேயே ஆர்வம் கொண்ட பயிற்சிகளில் மட்டுமே சேர்த்துவிட வேண்டும். தன் நண்பர்களிடையே பெருமையாகக் கூறிக்கொள்வதற்காக, பெற்றோர் தனது குழந்தைகளைப் பயிற்சிகளில் சேர்ப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

தோல்வியைக் கண்டு மாணவர்களாகிய நீங்கள் பயப்படக் கூடாது. அதுவும் வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சந்திரயான் நிலவில் தரையிறங்கும் நிகழ்வில் நான் கலந்துகொள்ள வேண்டாம் என்று கூறப்பட்டது. வெற்றி கிடைக்கும் என்பதில் உறுதி இல்லை என்று காரணம் சொல்லப்பட்டது. எனினும் நான் அங்கு செல்ல வேண்டிய தேவையிருந்தது. அவர்களை உற்சாகப்படுத்த அங்கு சென்றேன்.

கட்டுக்குள் தொழில்நுட்பம்

தொழில்நுட்பத்தை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் திறமை நமக்கு வேண்டும். அது நம்முடைய நேரத்தை வீணாக்கவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும். நம்முடைய வீடுகளில் ஓர் அறை, தொழில்நுட்பம் அற்றதாக இருக்க வேண்டும். அதில் யார் நுழைந்தாலும் தொழில்நுட்ப சாதனத்தைக் கையில் எடுத்துச் செல்லக் கூடாது.

அதேபோல உங்களை விடப் பெரியவர்களுடன் நேரத்தைச் செலவிட வேண்டியது அவசியம். இன்று வாய்ப்புகள் பெருகியுள்ளன. அவற்றை இளைஞர்களாகிய நீங்கள் சிறப்பாகப் பயன்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.

சமூக வலைதளங்கள் மூலம் இன்று மக்களிடையே பிணைப்பு அதிகமாகி உள்ளது. அதே நேரத்தில் தொழில்நுட்பங்களைத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்''.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x