Published : 20 Jan 2020 12:11 PM
Last Updated : 20 Jan 2020 12:11 PM

தேர்வுதான் அனைத்தும் என்ற எண்ணத்தில் இருந்து வெளியே வர வேண்டும்: மாணவர்கள் கலந்துரையாடலில் பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி மற்றும் 2 ஆயிரம் மாணவர்கள் இடையிலான கலந்துரையாடல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

'பரிக்‌ஷா பே சார்ச்சா' என்ற பெயரில் 2018-ம் ஆண்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

3-வது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 66 பேர் உட்பட நாடு முழுவதும் 2,000 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சி ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், தூர்தர்ஷன், வானொலி உள்ளிட்ட மத்திய அரசின் அதிகாரபூர்வ ஊடகங்களிலும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

டெல்லியில் உள்ள தால்கடோரா அரங்கத்தில் இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில், முதன்முறையாக 50 மாற்றுத்திறனாளி மாணவர்களும் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி இன்று (ஜன. 20) காலை 11 மணிக்குத் தொடங்கியது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி 'பரிக்‌ஷா பே சர்ச்சா' நிகழ்வில் பேசி வருகிறார். மாணவர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.

அவர் பேசும்போது, ''நீண்ட நாட்கள் நான் ஆட்சி நிர்வாகத்தில் ஓய்வின்றி இருந்தேன். மக்கள் இந்த வாய்ப்பை (பிரதமர்) அளிக்கும் முன்னால் முதல்வராகவும் இருந்தேன். இதுவரை ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வித்தியாசமான அனுபவங்களை எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால் யாராவது என்னிடம் உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சி எதுவென்றால், 'பரிக்‌ஷா பே சர்ச்சா' நிகழ்ச்சி என்பேன்.

தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் என்பது எல்லாமுமாக ஆகி விடாது. தேர்வுதான் அனைத்தும் என்ற எண்ணத்தில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். கல்வி தாண்டிய திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இல்லாத மனிதர்கள் ரோபோக்களாக மாறிவிடுவர்.

இன்று வாய்ப்புகள் பெருகியுள்ளன. அவற்றை இளைஞர்களாகிய நீங்கள் சிறப்பாகப் பயன்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்'' என்றார்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள சுமார் 2.6 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்ததாக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x