Published : 20 Jan 2020 08:34 AM
Last Updated : 20 Jan 2020 08:34 AM

புவி வெப்பமயமாதலை தடுக்க விழிப்புணர்வு: ஸ்கேட்டிங் சென்று 1 லட்சம் விதைப்பந்து தூவிய மாணவர்கள்

புவி வெப்பமயமாதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஸ்கேட்டிங் பயணம் மேற்கொண்ட உடுமலை பள்ளி மாணவர்கள்.

எம்.நாகராஜன்

உடுமலை

புவி வெப்பமயமாதலை தடுக்க பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 20 கி.மீ. ஸ்கேட்டிங் பயணம் செய்து 1 லட்சம் விதைப்பந்துகளை உடுமலை பள்ளி மாணவர்கள் தூவினர். பிரான்ஸ் நாட்டில் 2015-ம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட 11,000 விஞ்ஞானிகள் 'கடல் மரணித்தால் மனித குலமும் மரணிக்
கும்' என்று கூறி எச்சரித்தனர்.

அன்றைய மாநாட்டின் முக்கிய விவாத பொருளே புவி வெப்பமயமாதலை எப்படி தடுப்பது? என்பதாகத்தான் அமைந்தது. புவி வெப்பமயமாதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் பருவநிலை மாற்றத்தால் பாதிப்பு, கடுமையான வறட்சி, காட்டுத் தீ, வெள்ளம் போன்ற அபாயங்கள் ஏற்படும் என்று புவியியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

வாய்ப்பிருந்தால் நடந்து செல்லுங்கள், மிதிவண்டியில் செல்லுங்கள். பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துங்கள். இதனால் உடல் நலமும், சுற்றுசூழலும் பேணப்படும், தனி நபர்பொருளாதாரமும் சேமிக்கப்படும். மின்சார வாகனங்களை தேர்ந்தெடுங்கள்.

விமான பயணத்தை விடுத்து ரயில் பயணங்களை மேற்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகின்றனர் விஞ்ஞானிகள். அந்த வகையில், புவி வெப்பமயமாதலால் ஏற்படும் பாதிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்றது. உடுமலை ஜாக்குவார் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில், நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஸ்கேட்டிங் மாணவர்கள் பங்கேற்றனர்.

'விதைகளை தூவுவோம் விருட்சம் வளர்ப்போம்' என்று முழங்கியவாறு பள்ளி மாணவ, மாணவிகள் முக்கிய சாலைகள் வழியாக ஸ்கேட்டிங் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உடுமலை, போடிபட்டி, அண்ணா நகர், உடுமலை திருப்பதி, பள்ளப்பாளையம், கொங்கலக்குறிச்சி, குறிச்சிக்கோட்டை, மானுப்பட்டி, இந்திரா நகர், ஒன்பதாறு சோதனைச் சாவடி வரை 20 கி.மீ., வரை ஸ்கேட்டிங் பயணம் மேற்கொண்டு 60,000 புங்கன், 40,000 வேம்பு என 1 லட்சம் விதை பந்துகளை சாலையோரங்களில் தூவிச் சென்றனர். இதைக் காண வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் திரண்டு மாணவர்களின், இம் முயற்சிக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.

“உலகில் இதுவரை யாரும் விளையாட்டு மூலமாக மாணவர்கள் இது போன்ற முயற்சியை மேற்கொள்ள வில்லை என்பதால், புதிய உலக சாதனையாக அங்கீகரிக்க, எலைட் வேர்ல்டு ரெக்கார்டு, ஆசியன் ரெக்கார்டு அகாடமி, தமிழன் புக் ஆஃப் ரெக்கார்டு, இந்திய ரெக்கார்டு அகாடமி ஆகிய 4 உலக சாதனை நிறுவனங்கள் முன்வந்துள்ளன” என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன், அமராவதி சைனிக் பள்ளி முன்னாள் மாணவர் சங்க தலைவர் செந்தில்குமார் ஆகியோர் மாணவர்களின் விழிப்புணர்வு பயணத்தை முடித்துவைத்து வாழ்த்தினர். புவி வெப்பமயமாதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஸ்கேட்டிங் பயணம் மேற்கொண்ட உடுமலை பள்ளி மாணவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x