Published : 20 Jan 2020 07:16 AM
Last Updated : 20 Jan 2020 07:16 AM

தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு

நாடு முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான முகாம் நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள் என 43 ஆயிரத்து 51 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. பெற்றோர்கள் ஆர்வமாக தங்களுடைய குழந்தைகளை அழைத்து வந்து சொட்டு மருந்து போட்டுச் சென்றனர்.

வேலை, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புலம் பெயர்ந்து தமிழகத்தில் வசித்து வருபவர்களின் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும். விடுபடும் குழந்தைகளை அடையாளம் காண, தற்போது சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளின் இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்பட்டது.

போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர்.

சென்னையில் அடையாறு அருகே பசுமை வழிச்சாலையில் அமைந்துள்ள முதல்வர் கே.பழனிசாமி இல்லத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று காலை 7.30 மணிக்கு நடைபெற்றது. முதல்வர் கே.பழனிசாமி 10 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி கூறும்போது, "இந்தியா தொடர்ந்து 5-வது ஆண்டாகவும் தமிழகம் 16-வது ஆண்டாகவும் போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளன.

ஆண்டுக்கு இருமுறை போடப்பட்டு வந்த போலியோ சொட்டு மருந்து கடந்த ஆண்டு முதல் ஒருமுறையாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 5 வயதுக்குட்பட்ட 70.5 லட்சம் குழந்தைகளில், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடிகளில் அதிக அளவில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடப்பட்டது. இன்னும் ஒரு வாரத்துக்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளலாம். செவிலியர்கள் வீடுவீடாக சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடுவார்கள்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x