Published : 18 Jan 2020 02:34 PM
Last Updated : 18 Jan 2020 02:34 PM

மாற்று திறனாளி குழந்தைகளுக்காக சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.3 கோடியில் மேலும் 2 இடங்களில் ‘உணர்வுப் பூங்கா’: வளசரவாக்கம், அடையாறு மண்டலங்களில் அமைகிறது

ச.கார்த்திகேயன்

மாற்று திறனாளி குழந்தைகளுக்கு உகந்த ‘உணர்வுப் பூங்கா’க்களை ரூ.3 கோடியே 48 லட்சம் செலவில் மேலும் 2 இடங்களில் சென்னை மாநகராட்சி அமைக்க உள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் 669 பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சிறுவர்களுக்கான பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை அனைத்தும், இயல்பான குழந்தைகள் விளையாடும் வகையிலேயே உள்ளன. இதில் மாற்று திறனாளி குழந்தைகள் விளையாட முடிவதில்லை.

இதனால், சென்னை மாநகராட்சி சார்பில் சாந்தோம் பகுதியில் மாற்று திறனாளி குழந்தைகள் விளையாடுவதற்கான சிறப்பு பூங்கா ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் ரூ.1 கோடியே 37 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவுக்கு ‘உணர்வுப் பூங்கா’ என பெயரிடப்பட்டுள்ளது.

இதில் மாற்று திறனாளி குழந்தைகள் எளிதில் அணுகும் வகையிலும், அவர்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உபகரணங்களும் நிறுவப்பட்டுள்ளன. இப்பூங்கா பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து மேலும் 2 இடங்களில் உணர்வு பூங்காக்களை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

மாற்று திறனாளி குழந்தைகளும் நம்மில் ஒருவர்தான். அவர்களும், மற்றவர்களைப்போல பொழுதுபோக்கு அம்சங்களைப் பயன்படுத்தி மகிழ வேண்டும் என்ற நோக்கத்தில், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் உதவியுடன், மாற்று திறனாளிகள் தினத்தன்று, மாற்று திறனாளி குழந்தைகளை மெரினா கடற்கரைக்கு அழைத்துச் சென்று கடல் அலைகளை ரசிக்கவும், அலைநீரில் கால்களை நனைத்து மகிழவும் மாநகராட்சி சார்பில் ஆண்டுதோறும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் ‘உணர்வுப் பூங்கா’ சாந்தோம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் 2 இடங்களில் ‘உணர்வுப் பூங்கா’க்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம். அதற்காக வளசரவாக்கம் மண்டலம் 143-வது வார்டு, சக்தி நகர் பிரதான சாலை மற்றும் அடையாறு மண்டலம், 172-வது வார்டு, கோட்டூர் கார்டன் முதல் குறுக்குத் தெரு ஆகிய 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.3 கோடியே 48 லட்சம் செலவில் இப் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. அதற்கான டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. அடுத்த மாதம்பணிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

இப் பூங்காக்களில், பார்வைத் திறன் இல்லாத குழந்தைகள் தொட்டுப் பார்த்து, கதைகளை தெரிந்து கொள்ளும் வகையில் சித்திரங்கள், வாசனையை நுகர்ந்து பார்த்து செடிகளை கண்டுபிடிக்கும் வகையிலான மூலிகை பூங்கா ஆகியவைஅமைக்கப்படும். இதுபோன்றஅம்சங்கள் இடம்பெற்றிருப்பதால்தான் இப் பூங்காவுக்கு ‘உணர்வு பூங்கா’ என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் ஒலிகளை உணரும் உபகரணங்கள், பரமபதம், பல்லாங்குழி போன்ற பாரம்பரிய விளையாட்டுகளும் இடம்பெற்றுள்ளன. சக்கர நாற்காலியில் இயங்கியவாறே விளையாடும் சிறிய கூடைப்பந்து விளையாட்டு திடல், அதேபோல் ஊஞ்சலில் ஆடும் வசதி, பிரத்யேக கழிவறைகள் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ச.கார்த்திகேயன்


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x