Published : 18 Jan 2020 07:10 AM
Last Updated : 18 Jan 2020 07:10 AM

தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்கள் அமைப்பு; நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்: 71 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது

சென்னை

தமிழகத்தில் போலியோ சொட்டுமருந்து முகாம் நாளை நடைபெறுகிறது. 5 வயதுக்கு உட்பட்ட 71 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க 43 ஆயிரம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாடுமுழுவதும் போலியோவை (இளம்பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக ஆண்டு தோறும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியாவும் சேர்ந்துள்ளது. இதனால், கடந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி, நாடுமுழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஜனவரி 19-ம் தேதி(நாளை) நடைபெறுகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனைச் சாவடிகள் என 1,652 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தொலைதூரத்தில் உள்ள பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக ஆயிரம் நடமாடும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவைதவிர மேலும் 3 ஆயிரம் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

2 லட்சத்துக்கும் மேற்பட்டோர்

குழந்தைகளுக்கு போலியோசொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுகின்றனர்.

இதுதொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் க.குழந்தைசாமி கூறியதாவது:

தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 71 லட்சம் குழந்தைகள் இருப்பது கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது. போலியோ சொட்டு மருந்து மையம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோசொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாளில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். ஆரம்ப சுகாதாரநிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடதுகைசுண்டு விரலில் மை வைக்கப்படும்.

புலம்பெயர்ந்து வாழும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பது மிகவும் இன்றியமையாததாகும். எனவே, பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x