Published : 17 Jan 2020 06:07 PM
Last Updated : 17 Jan 2020 06:07 PM

ரூ.5 கோடி நிதியுதவி: சென்னை ஐஐடிக்கு வழங்கிய முன்னாள் மாணவர்!

தான் படித்த சென்னை ஐஐடிக்கு கிருஷ்ணா சிவ்குலா என்ற முன்னாள் மாணவர், ரூ.5 கோடி நிதி வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

''இந்தோ-யுஎஸ் எம்ஐஎம் டிஇசி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா சிவ்குலா. இவர் சென்னை ஐஐடிக்கு ரூ.5 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். முதல் கட்டமாக கடந்த 8-ம் தேதி ரூ.2.5 கோடியை ஐஐடி சென்னை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார். இத்தொகை 1961-ல் கட்டப்பட்ட பழம்பெரும் விடுதியான காவேரி விடுதி மேம்பாட்டுக்குப் பயன்படுத்தப்படும்.

இந்தத் தொகை மூலம் காவேரி விடுதியை உலகத் தரம் வாய்ந்த ஒன்றாக மாற்ற முடியும். வருங்காலத் தலைமுறை மாணவர்கள் இதன் மூலம் பயன்பெறுவர். மீதமுள்ள தொகையைக் கொண்டு ஐஐடி சென்னை வளாகத்தில் உள்ள இன்னும் இரண்டு விடுதிகள் தரம் உயர்த்தப்படும்.

நிதியுதவி வழங்கியது குறித்து கிருஷ்ணா கூறும்போது, 'சென்னை ஐஐடி எனக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வியை செலவே இல்லாமல் கற்றுக் கொடுத்தது. அதுதான் ஹார்வர்ட் பிஸினஸ் ஸ்கூலில் என்னைப் படிக்க வைத்தது. வாழ்க்கையில் என்னை வெற்றிகரமான மனிதனாக மாற்றியது.

என் வெற்றிக்குக் காரணமான ஆணிவேருக்குத் திருப்பி மரியாதை செலுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன். என்னுடைய மகிழ்ச்சியை சக ஐஐடி நண்பர்களும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்' என்று தெரிவித்தார்''.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x