Last Updated : 17 Jan, 2020 01:26 PM

 

Published : 17 Jan 2020 01:26 PM
Last Updated : 17 Jan 2020 01:26 PM

பால்சக்தி புரஸ்கார் விருதுக்கு புதுச்சேரி மாற்றுத் திறன் மாணவர் தேர்வு: குடியரசுத் தலைவரிடம் விருதுடன் ரூ.1 லட்சம் பெறுகிறார்

புதுச்சேரி

பால்சக்தி புரஸ்கார் விருதுக்கு புதுச்சேரி மாற்றுத் திறனாளி மாணவர் வெங்கட சுப்பிரமணியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் வரும் 22-ம் தேதி குடியரசுத் தலைவரிடம் விருது மற்றும் ரூ.1 லட்சம் பரிசு பெற உள்ளார்.

தேசிய குழந்தைகள் விருதானது தற்போது பால்சக்தி புரஸ்கார் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. இவ்விருதுக்கு புதுச்சேரி நெல்லித்தோப்பைச் சேர்ந்த வெங்கட சுப்ரமணியன் தேர்வாகியுள்ளார். ஜிப்மர் கேந்திரிய வித்யாலயாவில் 11-ம் வகுப்பு படித்து வரும் இவர் மாற்றுத்திறன் மாணவர்.

இடது கை குறைபாட்டுடன் பிறந்தாலும், வெங்கட சுப்பிரமணியன் நம்பிக்கையைக் கைவிடவில்லை. தன்னம்பிக்கையோடு படிப்பு, இசை, கராத்தே, சமூகப் பணி, விளையாட்டு, யோகா, சாரணியர் இயக்கப் பணி, பிறமொழிக் கற்றல் என பல துறைகளிலும் இவர் சிறப்பிடம் பெற்றுள்ளார். இவரது தந்தை ராமமூர்த்தி தனியார் நிறுவனத்தில் ஓட்டுநர். தாய் ஜெய்பிரதா இல்லத்தரசியாக உள்ளார்.

தற்போது பால்சக்தி புரஸ்கார் விருதுக்குத் தேர்வாகியுள்ள வெங்கட சுப்ரமணியன் கூறுகையில், "சர்வதேச அளவில் ஹரியாணா மாநிலத்தில் கர்னலில் உள்ள இளைஞர் விழாவில் பங்கேற்றுள்ளேன். தேசிய அளவில் மகாராஷ்டிரத்தில் சேவா கிராமத்தில் நடந்த காந்திய அமைதி முகாமில் இளம் வயதிலேயே பங்கேற்றுள்ளேன்.

பல விளையாட்டுப் போட்டிகளில் சிறு வயதில் பங்கேற்று வென்றுள்ளதால் ஏற்கெனவே சமூக நலத்துறை சிறப்பு ஊக்கப்பரிசு கிடைத்துள்ளது. அத்துடன் அபாகஸ் பயிற்சியில் பத்து அலகுகளை முடித்து, சர்வதேச அளவிலான அபாகஸில் தங்கப்பதக்கம் வென்றுள்ளேன். என்னுடைய தொடர் முயற்சி மற்றும் தன்னம்பிக்கையைப் பாராட்டி தற்போது தேசிய குழந்தை விருதுக்காகத் தேர்வாகியுள்ளது மகிழ்ச்சி தருகிறது" என்றார்.

டெல்லியில் தேசிய விருதினை ஜன.22-ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் பெற உள்ளார். விருதுடன், சான்றிதழ், ரூ. 1 லட்சம் பரிசு ஆகியவை கிடைக்க உள்ளது. அத்துடன் ஜனவரி 26-ம் தேதி நடக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பிலும் இவர் பங்கேற்க உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x