Published : 16 Jan 2020 05:01 PM
Last Updated : 16 Jan 2020 05:01 PM

குட்டிக் கதை 20:  நாய், பூனைக்கு ஏன் பொங்கல் இல்லை?

“பார்த்தியா, அவங்க ரெண்டு பேருக்கும் எவ்ளோ மரியாதை தராங்க, நாம கூடதான் எவ்ளோ செய்றோம், ஆனா நம்மள கண்டுக்கவே மாட்டேங்கறாங்க” என்று அந்த பூனை சொன்னவுடன் “நீ சொல்றது கரெக்ட் தான், நானும்தான் வீட்டை காவல் காக்கறேன். ஆனா என்ன பிரயோஜனம்” என்று நாயும் எரிச்சலோடு சொன்னது.

“அந்த மாட்டையும் கன்னுக் குட்டியையும் குளிப்பாட்டி, மஞ்சள் பூசி, குங்குமம் வச்சு, மாலை போட்டு அழகு பார்க்கறாங்க. ஏன்னா இன்னிக்கு மாட்டுப் பொங்கலாம்” என்று பூனை பொறுமியது.

“ஆமா, மாடுங்க மட்டும்தான் உதவி செய்யுதா, நாமளும்தான் உதவி செய்றோம், ஆனா நமக்குன்னு நாய் பொங்கல், பூனை பொங்கல் அப்படின்னு எதுவும் இல்லயே, இந்த மனுஷங்க ரொம்ப மோசம்” என்று கோபத்தோடு நாய் சொன்னது.

“இந்த மாட்டையும் கன்னுக் குட்டியையும் பார்க்கும்போது கோபமா வருது. அதுங்களை ஏதாவது செய்தாதான் என் ஆத்திரம் அடங்கும்” என்றது பூனை.

இவர்கள் பேசுவதை ஒளிந்திருந்து கேட்டுக் கொண்டிருந்தது ஓர் ஆடு. அவர்கள் வீட்டுப் பண்ணையில் இருந்த ஆடு, நாயும் பூனையும் பேசியது பற்றி மாட்டிடம் சொன்னது.

“அவர்கள் நினைப்பதிலும் தவறு இல்லை. ஆனால் ஒருவருக்கு ஒரு பெருமை கிடைக்குதுன்னா அதுக்கு கண்டிப்பா ஏதோ ஒரு காரணம் இருக்கும்தானே, அது அவங்களுக்குப் புரியல”

“அதை அவங்களுக்கு எப்படிப் புரிய வைக்கறது?”

“இன்னும் சில நாட்கள்ல அதை நான் புரிய வைக்கறேன்” என்றது மாடு.

இரண்டு நாட்கள் கழிந்தன. “என்னங்க, இந்தப் பூனை இப்போதான் இரண்டு குட்டி போட்டிருக்கு, தாய்க்கும் குட்டிங்களுக்கும் தேவையான பாலை நம்ம மாடுதான் தந்துட்டு இருந்தது. ஆனா இன்னிக்கு இந்த மாடு ரொம்ப மொரண்டு பண்ணுது, பால் கறக்க விடமாட்டேங்குது, இப்போ என்னங்க பண்றது?” என்று அந்த வீட்டு அம்மா பேசிக் கொண்டிருந்தார்.

பூனை, நாய், ஆடு என எல்லாமே இதைக் கேட்டுக் கொண்டிருந்தன.

“நாயாரே, இப்போ நான் என்ன பண்றது? எனக்கும் என் குழந்தைகளுக்கும் பால் பத்தல, இந்த மாடும் இப்படி சதி செய்யுது” என்று அழுதது பூனை.

“ச்சே, இதே மாட்டைப் பத்தி அன்னிக்கு அவ்ளோ மோசமா பேசினோம், ஆனா இப்போதான் மாட்டோட அருமை புரியுது. நாம அடுத்தவங்களுக்கு நல்லது மட்டும்தான் செய்றோம். ஆனா மாடுங்க தான் தங்களோட பாலைக் கூட அடுத்தவங்களுக்கு கொடுக்கறாங்க, கொடுக்கறது எவ்ளோ முக்கியம்னு இப்போ புரியுது” என்று கூறியது நாய்.

“ஆமாம், நீ சொல்றது சரிதான். நான் இப்பவே போய் மாடுகிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்” என்றது.

அப்பொழுது அங்கே வந்த மாடு, “மன்னிப்புலாம் தேவை இல்லை நண்பா, என்னைப் புரிஞ்சிகிட்டீங்களே, அதுவே போதும்” என்றது.

“ஓ! நீ பிளான் பண்ணிதான் பால் தராம அடம் பண்ணியா?” என்று ஆடு கேட்டது.

“ஆமாம், அவர்களுக்குப் புரிய வைக்கத்தான் அப்படி நடிச்சேன். தங்களிடம் உள்ளதைப் பிறருக்கு மனமுவந்து தருபவர்கள் யாராயிருந்தாலும் அவங்களை இந்த உலகம் எப்பவும் பெருமைப்படுத்தும்னு இப்போ அவங்களுக்குப் புரிஞ்சிருக்கும்” என்று மாடு கூறியது.

நீதி: செய்த உதவியும் இட்டு வைத்த விதையும் வீணாகாது.

- கலாவல்லி அருள், தலைமையாசிரியர்,
அரசு உயர்நிலைப் பள்ளி, திருக்காலிமேடு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x