Last Updated : 16 Jan, 2020 04:49 PM

 

Published : 16 Jan 2020 04:49 PM
Last Updated : 16 Jan 2020 04:49 PM

அதிகரிக்கும் தற்கொலைகளைத் தடுக்க புதுச்சேரியில் இளையோர் செல்போன் செயலி அறிமுகம்

புதுச்சேரியில் தற்கொலை சதவீதம் அதிகரித்துள்ள சூழலில் இளையோருக்கு உதவ முதல் முறையாக செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இளையோர் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவ மையம் மற்றும் புதுவை தொழிலாளர் துறை இணைந்து இந்தியாவின் முதல் இளையோர் உதவி எண் செல்போன் செயலியை வெளியிட்டன.

அமிகோ ஒன் என்னும் மென்பொருள் நிறுவனத்தின் உதவியுடன் தேவையிலும் ஆபத்தின் விளிம்பிலும் உள்ள இளையோர்களுக்கு உதவும் வகையில் பிரத்யேகமாக ஒரு செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இளையோர் தலைமைத்துவ அறுவடைத் திருநாள் பயிற்சிப் பட்டறை விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக கலாச்சார இயக்குநர் பேராசிரியர் ராஜீவ் ஜெயின், எஸ்பி ரக்சனா சிங், அரசு பொது மருத்துவமனை மனநல மருத்துவ நிபுணர் சாக்டர் பாலன் பொன்மணி ஸ்டீபன் ஆகியோர் செல்போன் செயலியை வெளியிட்டனர்.

இளையோர் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவ மைய நிறுவனர் சிவா மதியழகன், நிர்வாகி சுரேஷ் கிருஷ்ணா ஆகியோர் கூறுகையில், "புதுச்சேரியின் தற்கொலை விகிதம் தேசிய சராசரியைவிட மூன்று மடங்கு அதிகமாகும். தேசியக் குற்றப் பதிவு பணியகம் 2018-ம் ஆண்டின் அறிக்கைப்படி, புதுச்சேரி மாநிலம் நாட்டின் தற்கொலை விகிதத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதே அறிக்கையில் 50 %-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டோர் 14-35 வயதுடைய இளையோர்களாகவே இருக்கிறார்கள்.

நெருக்கடியில் சிக்கியுள்ள இளையோரை மீட்கும் வகையில் புதுச்சேரி இளையோர் உதவி எண் (9655507090) 2014-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது தற்கொலைக்கான அடிப்படைக் காரணங்களை அணுக பல்வேறு வகையான சேவைகளை வழங்குகிறது. அதில் மனநல ஆலோசனை, கல்விக் கடன் ஆதரவு, வாழ்க்கை வழிகாட்டல், வேலை வாய்ப்பு உதவி, பயிற்சி, மற்றும் தொழில் முனைவோர் வழிகாட்டல் ஆகியவை வழங்கப்படுகின்றன. இச்சேவைகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை, காலை 10 முதல் 7 மணி வரை இயங்கும்.

இளையோர் தங்களின் வாழ்க்கையை, எதிர்மறை எண்ணங்களால் இழந்து வருகிறார்கள். புதுவையில் இளையோர் தற்கொலையை 2030-ம் ஆண்டுக்குள் பூஜ்ஜியமாக்குவதே எங்களின் இலக்கு" என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x