Published : 16 Jan 2020 01:09 PM
Last Updated : 16 Jan 2020 01:09 PM

கிரிக்கெட்டில் மிரட்டும் 4 வயதுச் சிறுவன்: தோனி, மத்திய அமைச்சர் நேரில் அழைத்துப் பாராட்டு

கோப்புப்படம்

சென்னையைச் சேர்ந்த 4 வயதுச் சிறுவன் சூர்யதேவின் அசாத்திய கிரிக்கெட் திறமைகளைக் கண்ட மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர், சிறுவனை நேரில் அழைத்துப் பாராட்டினார்.

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 4 வயதுச் சிறுவன் சனுஷ் சூர்யதேவ். பென்சில் எடுத்து எழுதிப் பழக வேண்டிய சூர்யதேவின் கைகள் கிரிக்கெட் மட்டையைப் பிடித்து பந்துகளை அடித்துத் துவைக்கின்றன. எதிர்வரும் பந்துகளை லாவகமாகப் பிடிக்கின்றன. அசாத்தியத் திறமையால் மற்றவர்களை அசர வைத்த சிறுவன் சூர்யதேவ், ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார். மிக இளம் வயதுத் தொழில்முறை கிரிக்கெட் வீரர் என்ற அங்கீகாரம் அவருக்குக் கிடைத்தது.

இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாயின. இந்தச் செய்தியை அறிந்த இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, சூர்யதேவை குடும்பத்துடன் நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்தார். தன் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டையும் சிறுவனுக்குப் பரிசாக அளித்தார்.

இந்நிலையில் தற்போது மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் சிறுவனை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து சிறுவன் சூர்யதேவ் மழலை மாறாத குரலில் கூறும்போது, ''எனது வீடியோவை கூகுளில் பார்த்ததாகச் சொன்னார். நன்றாக பவுலிங், பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்தும் சிறப்பாகச் செய்கிறீர்கள் என்று கூறினார். 'ஸ்மார்ட் பாய்' என்றும் சொன்னார். நீங்கள் கண்டிப்பாக இந்தியாவுக்காக விளையாடுவீர்கள் என்று அமைச்சர் வாழ்த்தினார்'' என்றார்.

''சூர்யதேவின் முயற்சியால், ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்தான். தொடர் உழைப்பால் அவனை இந்திய அணியில் இடம்பெறச் செய்வதே எங்களின் லட்சியம்'' என்று சூர்யதேவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x