Last Updated : 13 Jan, 2020 11:33 AM

 

Published : 13 Jan 2020 11:33 AM
Last Updated : 13 Jan 2020 11:33 AM

கண்கொள்ளா புத்தகக் காட்சி!

புத்தகங்கள் அலமாரிக்கு அல்ல ஆன்மாவுக்கு என்பார்கள். ஏனென்றால் புத்தகங்களால் தோழராக நம் மனதோடு பேசுபவை. வழிகாட்டியாக, ஆசானாக உற்ற துணையாக நம்மை செம்மைப்படுத்துபவை. இத்தனை அலாதியான புத்தகங்களின் பிரம்மாண்ட அணிவகுப்புதான் புத்தகத் திருவிழாக்கள்.

சென்னையில் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் சென்னைப் புத்தகக் காட்சியின் 43-வது ஆண்டு தொடங்கிவிட்டது. சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. கல்லூரியின் திடலில் கடந்த வாரம் தொடங்கிய இந்த விழா ஜனவரி 21-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

அறிவியல், பொது அறிவு, வரலாறு, அரசியல், சூழலியல், இலக்கியம் உள்ளிட்ட பல துறைகள் சார்ந்த லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. புத்தகங்கள் மட்டுமின்றி நூல் வெளியீட்டு விழா, பேச்சரங்கம், இலக்கியக் கூட்டம், திரையிடல் உள்ளிட்ட பல நிகழ்வுகள் உங்களுடைய வருகையை எதிர்பார்த்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வளவு அற்புதமான புத்தகக் காட்சியை நீங்கள் தவறவிடலாமா மாணவர்களே! நடைபெற்றுவரும் புத்தகக் காட்சியில் நீங்கள் அவசியம் வாங்கி படிக்க வேண்டிய புத்தகங்களில் சிலவற்றை குறித்த ஒரு பார்வை இதோ:

நீங்களும் கலாம் ஆகலாம்!

விஞ்ஞானி என்று சொன்னாலே ஒரு ஆய்வுக்கூடத்தில் வெள்ளை அங்கி அணிந்துகொண்டு நுண்ணோக்கி வழியாக எதையோ உற்று பார்க்கும் நபர்தான் கண்முன்னே தோன்றுவார். ஆனால், பலவிதமான ஆராய்ச்சித் துறைகளும் அதற்கான விஞ்ஞானிகளும் இருக்கிறார்கள். விண்வெளி விஞ்ஞானி, ராணுவ விஞ்ஞானி, விமானத்துறை விஞ்ஞானி, அணு சக்தி விஞ்ஞானி, விவசாய விஞ்ஞானி என அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதுபோன்ற விஞ்ஞானியாவதற்கான வழி, சிறப்பு ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள் குறித்த தகவல்கள், எந்தெந்தப் பாடப்பிரிவுகளைப் படிக்கலாம், படித்து முடித்தால் எங்கெல்லாம் வேலைவாய்ப்பு உள்ளது, ஏற்கெனவே இத்துறைகளில் சாதித்த விஞ்ஞானிகள் பற்றிய சுவையான செய்திகள் உள்ளிட்டவை அடங்கிய புத்தம்
தான், ‘அடுத்த கலாம்-விஞ்ஞானி ஆகும் வழிகள்’.

‘அடுத்த கலாம்-விஞ்ஞானி ஆகும் வழிகள்’
விஞ்ஞானி வி.டில்லிபாபு
முரண்களரி படைப்பகம், சென்னை
அலைபேசி: 98413 74809, 90925 45686.
விலை: ரூ.150/-

சீரும் சிறப்புமாக வளர!

‘உள்ளே வீசப்படும் செய்தித்தாளை அப்பாவிடம் கொடுக்கவும் கீரை விற்பவள் வந்தால் அம்மாவைக் கூப்பிடவும் கற்றுக்கொள்கிறது குழந்தை யாரும் கற்றுத் தராமலேயே’- கவிஞர் அ.வெண்ணிலா. உண்மைதானே பெற்றோர் சொல்லித் தருவதை கேட்டு கற்றுக்கொள் வதைவிடவும் அவர்களின் நடத்தையை உற்று நோக்கி கற்றுக்கொள்வது தான் குழந்தைகளின் இயல்பு.

நல்ல குழந்தைகளை வளர்த்தெடுத்து கல்விச் சாலைக்கு பெற்றோர் அனுப்பினால் மட்டுமே அவர்களை நல்ல மாணவர்களாக ஆசிரியர்களால் வார்த்தெடுக்க முடியும். குழந்தைகளை சீரும் சிறப்புமாக வளர்ப்பதற்கான வழியும் வழிகாட்டுதலும் கொண்ட புத்தகம், ‘நன்மைகளின் கருவூலம்’. பெற்றோரும் இரண்டாவது பெற்றோராகச் செயல்பட வேண்டியவர்களான ஆசிரியர்களும் வாசக்க வேண்டிய நூல்.

‘நன்மைகளின் கருவூலம்:
குழந்தை வளர்ப்பின் இரகசியம்’
பிரியசகி, ஜோசப் ஜெயராஜ்,
பாரதி புத்தகாலயம், சென்னை,
தொலைப்பேசி: 044-2433424. விலை:ரூ.150/-

மாணவர்களை கவர்ந்த நூல்

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பே கல்வியில் பல சோதனை முயற்சிகளை மேற்கொண்டு சாதனை படைத்தவர் தாகூர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் போராடிப் படித்து ஆசிரியையாகவும் மாறி வரலாறு படைத்தவர் சாவித்ரிபாய் பூலே. இப்படி ஆகச் சிறந்த ஆளுமை
கள் பலர் வாழ்ந்திருக்கிறார்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் வாழ்க்கை கதை, கவிதை, பாடல், ஓவியம் வடிவில், ‘இடம் பொருள் மனிதர் விலங்கு’ என்ற தொடராக ‘தமிழ் இந்து’ நாளிதழின் இணைப்பிதழான ‘மாயா பஜார்’-ல் கடந்தாண்டு வெளிவந்தது. மாணவர்களிடம் பரவலான வரவேற்பை இத்தொடர் ‘பாரதியின் பூனைகள்’ என்ற தலைப்பில் தற்போது புத்தகமான வெளிவந்துள்ளது.

‘பாரதியின் பூனைகள்’
மருதன்
தமிழ் திசை பதிப்பகம்
Kasturi Building, Anna Salai, Chennai- 2.
விலை: ரூ.80/-

கீழடி சொன்ன தமிழ் பண்பாடு

இன்று நாம் நவீன மயமான வளர்ச்சியை அடைந்திருப்பதன் தொடக்கப் புள்ளி பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் நம் முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சிறு கற்கருவிகள், சக்கரம் மற்றும் தொல்பொருட்களே. 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த கீழடியின் பண்பாடு குறித்த அகழாய்வு முடிவுகள் அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

26 நூற்றாண்டுகளுக்கு முன்பே மதுரைக்கு அருகில் உள்ள கீழடி என்ற நகரத்தில் வாழ்ந்த மக்கள் நாகரிகமான சமுதாயமாக வாழ்ந்தனர் என்பதற்கான தரவுகள் அகழாய்வின் மூலமாக கிடைத்துள்ளன. கீழடி அகழாய்வு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய இந்த புத்தகத்தை தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்துடன் கைகோர்த்து, தமிழ்நாடு அரசுதொல்லியில் துறை வெளியிட்டிருக்கிறது. இது மட்டுமின்றி சென்னை புத்தகக் காட்சியில் கீழடி அகழாய்வு குறித்த வரலாற்றுப் பதிவுகள் தத்ரூபமாக மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

‘கீழடி-வைகை நதிக்கரையில்
சங்க கால நகர நாகரிகம்’
தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசு, சென்னை -8.
விலை:ரூ.50/-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x