Published : 13 Jan 2020 07:43 AM
Last Updated : 13 Jan 2020 07:43 AM

தனியார் பள்ளிகளை மிஞ்சிய டெல்லி அரசுப் பள்ளிகள்: நோபல் பரிசு வென்ற அபிஜித் பேனர்ஜி புகழாரம்

தனியார் பள்ளிகளைக் காட்டிலும் சிறப்பாக அரசுப் பள்ளிகளால் கல்வி வழங்க முடியும் என்பதை டெல்லி அரசுப் பள்ளிகளின் செயல்பாடு நிரூபித்துள்ளதாக 2019-ம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை வென்ற இந்தியரான அபிஜித் பேனர்ஜி சனிக்கிழமை அன்று தெரிவித்தார். அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் அபிஜித் பேனர்ஜி.

வறுமை ஒழிப்பை மையமாக வைத்து பொருளாதாரப் பிரிவில் மேற்கொண்ட ஆய்வுக்கு அப்ஜித் விநாயக் பேனர்ஜி, அவருடைய துணைவியார் எஸ்தர் டஃப்லோ மற்றும் மைக்கெல் க்ரெமர் ஆகிய மூன்று பேருக்கும் 2019-ம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

டெல்லி பள்ளிக் கல்வி குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலின் தலைமையிலான அரசின் செயல்பாட்டைப் பற்றி இரு தினங்களுக்கு முன்னால் அபிஜித் பேனர்ஜி பேசுகையில் கூறியதாவது: டெல்லி அரசு, கல்விக்கு தாராளமாக நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. ஆசிரியர்களின் ஊதியம் மற்றும் கல்வி அமைப்பின் மேம்பாட்டு நடவடிக்கைகளில் அது வெளிப்பட்டிருக்கிறது.

இனி ஆசிரியர்கள் சிறப்பாகச் செயல்படுவதற்கான நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட வேண்டும். சராசரியான தனியார் பள்ளிகளை விடவும் அரசுப் பள்ளிகளால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை நான் தீர்க்கமாக நம்புகிறேன். இதை டெல்லி அரசுப் பள்ளிகளும் நிரூபித்து காட்டிவிட்டன. டெல்லியின் மாநகராட்சிப் பள்ளிகள் உட்பட பல அரசு பள்ளிகள் இங்குள்ள சராசரி தனியார் பள்ளிகளை மிஞ்சி விட்டன என்பதை கண்கூடாகப் பார்த்துவிட்டோம்.

கூட்டாட்சி தத்து வத்தின் அடிப்படையில் அரசியல் அமைப்பை கொண்ட இந்தியா போன்ற நாட்டில் கல்வியை அரசு வழங்கு வதே சரியாக இருக்க முடியும். கல்வி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால் கல்விக்கான அரசின் நிதி ஒதுக்கீடு மளமளவெனக் குறைந்துவிடும். அதைத்தான் தற்போது மத்திய அரசு செய்துவருகிறது என்பது கவலைக்குரியது.

ரூ.3000 கோடி கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது இதைத்தான் காட்டுகிறது. கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் கை வைப்பதற்கு பதிலாக மனிதவள மேம்பாட்டுத் துறையை சீர்திருத்துவதிலும், பல்கலைக்கழக மானியக் குழுவைப் புனரமைப்பதிலும், பாடத்திட்டத்தை புதுப்பிக்கும் நடவடிக்கையிலும் கவனம் செலுத்த வேண்டும். கல்வி வாரியங்கள்தாம் பாடத்திட்டத்தை வடிவமைக்க வேண்டும். அதற்கு பதிலாக அந்த பொறுப்பை தனிப்பட்ட கல்வி நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.

என்னைக் கேட்டால் நமக்கு முன்னால் இருக்கும் உண்மையான சிக்கல் பணமல்ல. இங்கு கல்வி அமைப்பு நெகிழ்வுத் தன்மையற்று மிகவும் இறுக்கமாகவும் கடினமாகவும் உள்ளது. கல்வி பட்ஜெட்டின் பெரும்பங்கை ஊதியமும் ஓய்வூதியமுமே கபளீகரம் செய்துவிடுகின்றன. இவற்றை சீர்திருத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அபிஜித் பேனர்ஜி கருத்து தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x