Published : 11 Jan 2020 08:05 AM
Last Updated : 11 Jan 2020 08:05 AM

‘நாளிதழ்கள் வாசிப்பே எனது வெற்றிக்கு காரணம்’- சென்னை பல்கலைக்கழக கருத்தரங்கில் ஐஏஎஸ் அதிகாரி சுரேஷ்குமார் பெருமிதம்

நாளிதழ்கள் வாசிப்பே தனது வெற்றிக்கு காரணம் என்று தமிழக சிறுபான்மையினர் நலத் துறை இயக்குநர் சீ.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவன தமிழ்த் துறை, மலேசிய நாட்டின் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகம், ‘இந்து தமிழ்’ நாளிதழ் ஆகியவை சார்பில் 'பாதுகாப்பு - பல்துறை பார்வை' என்ற தலைப்பில் ஒருநாள் சர்வதேச கருத்தரங்கம் சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது.

தமிழ்த் துறை பேராசிரியர் மு.சற்குணவதி எழுதியுள்ள 'உடுக்கடியில் அண்ணன்மார் கதைப்பாடல்', 'மேற்கு தொடர்ச்சி மலைவாழ் முதுவர் பழங்குடிகளின் பண்பாட்டு நிலை' ஆகிய இரு நூல்களை தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் ந.அருள் வெளியிட, அவற்றின் முதல் பிரதிகளை ‘இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்க ஆசிரியர் சமஸ் பெற்றுக் கொண்டார். இரு நூல்களின் குறுந்தகடுகளை தமிழக அரசின் சிறுபான்மையினர் நலத் துறை ஆணையர் சீ.சுரேஷ்குமார் வெளியிட, அவற்றை மலேசியா சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக பேராசிரியர் இளங்குமரன் சிவநாதன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் சுரேஷ்குமார் பேசியதாவது:

இங்கு பேசிய 'இந்து தமிழ்' நாளிதழின் நடுப்பக்க ஆசிரியர் சமஸ் அரங்கில் உள்ள மாணவர்களை நோக்கி 4 நாளிதழ்கள் படிப்பவர்கள் யார் என்று கேட்டார். இது மிக முக்கியமான கேள்வி என்று நினைக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்தமானது வாசிப்பு. நான் மிகச் சிறு வயதிலேயே நாளிதழ்களை படிக்கத் தொடங்கி விட்டேன். 7-ம் வகுப்பு முதல் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழை வாசித்து வருகிறேன். ‘இந்து தமிழ்’ நாளிதழ் தொடங்கப்பட்ட நாளில் இருந்து விடாமல் வாசித்து வருகிறேன். மாணவப் பருவத்திலிருந்து தினமும் 4 நாளிதழ்களை வாசித்து வருகிறேன். என் வாழ்வின் வெற்றிக்கு அதுவே காரணம்.

4 நாளிதழ்கள் வாசிப்பதன் மூலம் 4 விதமான பார்வைகள் நமக்கு கிடைக்கும். நாட்டு நடப்புகளை, பல்வேறு கருத்துகளை, சிந்தனைகளை எது சரி, எது தவறு என்பதை நம்மால் தீர்மானிக்க முடியும். ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற, நாளிதழ்கள் வாசிப்பது பெரிதும் கை கொடுக்கும்.

முந்தைய காலத்தில் பிறப்பின் அடிப்படையிலேயே அனைத்தும் தீர்மானிக்கப்பட்டன. ஆனால், இப்போது யாரும் எதையும் சாதிக்க
முடியும். மாணவர் பருவம் என்பது இனிமையான முக்கியமான பருவம். இந்த காலகட்டத்தில் உங்கள் எண்ணங்களை, சிந்தனை
களை எதில் குவிக்கிறீர்களோ அதில் வெற்றி அடைய முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

கருத்தரங்கில் சமஸ் பேசியதாவது:

சென்னைப் பல்கலைக்கழகத்தின் கலாச்சார நடவடிக்கைகளில் தன்னை இணைத்துக் கொள்வதில் ‘இந்து தமிழ்’ பெருமை கொள்
கிறது. எந்தவொரு சமூகம் தன்னுடைய சுய மரியாதையை, சுய கவுரவத்தை, சுய அடையாளத்தை பேணுவதை மறக்கிறதோ, அச்சத்
துக்கு ஆட்படுகிறதோ அந்த சமுதாயத்தின் மொழி, அதிகாரத்தை இழந்து விடும்.

குறைந்த அளவு மக்களே பேசும் பல மொழிகள், ஆட்சி மொழியாகவும், அந்த நாடுகள் பொருளாதார வலிமை பெற்ற முற்போக்கு நாடுகளாகவும் இருப்பதைப் பார்க்கிறோம். கோடிக்கணக்கான மக்கள் பேசும் பல மொழிகள் ஆட்சி மொழிகளாக இல்லாமல் இருப்
பதையும் பார்க்கிறோம். ஒரு மொழியின் பாதுகாப்பு என்பது அந்த மொழிபேசும் மக்களின் பாதுகாப்பாகும். இதை நாம் உணர வேண்டும்.

கூட்டாட்சி நாட்டில் மக்கள் பேசும் அனைத்து மொழிகளுக்கும் ஆட்சி மொழி அந்தஸ்தும், சம அந்தஸ்தும் கிடைக்க நாம் குரல் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இவ்வாறு சமஸ் பேசினார்.

சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.சீனிவாசன், தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் கே.ரவிச்சந்திரன், தென்கொரிய பேராசிரியர் டிஎஸ்என் சங்கரநாராயணன், பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவன வணிகவியல் துறை பேராசிரியர் இரா.பாஞ்சாலன், கோட்பாட்டு இயற்பியல் துறை பேராசிரியர் ரீட்டா ஜான், பொருளியல் துறை பேராசிரியர் எஸ்.சின்னம்மை, கருவியாக்கத் துறை பேராசிரியர் டி.நெடுமாறன், மாநிலக் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் ஆர்.கண்ணன், தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் தமிழ்த் துறை பேராசிரியர் கி. சங்கரநாராயணன் ஆகியோர் உரையாற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x