Last Updated : 10 Jan, 2020 05:58 PM

 

Published : 10 Jan 2020 05:58 PM
Last Updated : 10 Jan 2020 05:58 PM

வானவில் போட்டியில் வென்ற புதுவை அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் கையால் பரிசு

புதுச்சேரியில் இரு நாட்கள் நடந்த பல்வேறு கலைப் போட்டிகளில் 500-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மற்றும் பாலபவன் மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர். அவர்களுக்குப் புதுவை முதல்வர் கையால் பரிசு வழங்கப்பட உள்ளது.

அரசு பள்ளிக்கல்வி இயக்ககத்தின் சமக்ர சிக்ஷா சார்பில் வானவில் என்ற ரங்க உத்சவ் நடத்தப்படுகிறது. இந்நிகழ்வில் புதுச்சேரி மாவட்ட அளவிலான போட்டிகள் ஜவஹர் சிறுவர் இல்லத்தில் இரு நாட்கள் நடந்தன. ஆசிரியர்களும் முதல் முறையாக இதில் பங்கேற்றனர்.

இதுகுறித்து திட்ட அதிகாரி பாஸ்கரராசு கூறுகையில், "அரசுப் பள்ளி மற்றும் பாலபவனில் பயிலும் குழந்தைகள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் பாலபவன் பயிற்றுநர்களுக்காக இப்போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் நாளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிப்போருக்கு வாய்ப்பாட்டு, ஓவியம், மாறுவேடப் போட்டி, தனி நடனம், இசைக்கருவி மீட்டல் மற்றும் வாசித்தல், நாடகம், நாட்டுப்புறக் குழு நடனம் ஆகியவை நடந்தன. இரண்டாம் நாளான இன்று ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிப்போருக்கு மாறுவேடப் போட்டி, நாட்டுப்புறக் குழு நடனம், நாடகம் ஆகியவை நடந்தன.

இதில் மொத்தம் 533 குழந்தைகள் பங்கேற்றனர். ஆசிரியர்கள், ஆசிரியைகள், பாலபவன் பயிற்றுநர்கள் ஆகியோருக்குத் தனி நடனம், இசைக்கருவி மீட்டல், வாய்ப்பாட்டு ஆகியவை நடந்தது. இதில் 30 பேர் முதல் முறையாக இன்று பங்கேற்றுத் திறனை வெளிப்படுத்தினர்.

போட்டிகளில் வென்றோர் வரும் 19-ம் தேதி கடற்கரை சாலையில் கலை நிகழ்வை நடத்துவர். அவர்களுக்கு முதல்வர் நாராயணசாமி பரிசு வழங்குவார். அரசுப் பள்ளிக் குழந்தைகள் தங்கள் திறனை வெளிப்படுத்தவே இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x